உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நிகிதா இதுவரை சொன்னதெல்லாம் பொய்யா? பகீர் பின்னணி | CBI suspects nikitha | Ajith Kumar Case

நிகிதா இதுவரை சொன்னதெல்லாம் பொய்யா? பகீர் பின்னணி | CBI suspects nikitha | Ajith Kumar Case

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் செக்யூரிட்டி அஜித்குமார் போலீஸ் காவலில் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை உண்டாக்கியது. பேராசிரியை நிகிதா என்பவர் கொடுத்த புகாரின் பேரில், அவரது நகைகளை அஜித்குமார் திருடியதாக சொல்லி தாக்குதல் நடத்தப்பட்டது. போலீஸ் தாக்குதலில் அஜித்குமார் இறந்ததும், அவர் வலிப்பு ஏற்பட்டு இறந்தார் என எம்ஐஆரில் பதிவு செய்யப்பட்டது. ஆனால் விசாரணையில், தனிப்படை போலீசார் ஐந்து பேர் மூர்க்கத்தனமாக தாக்கி, மரணத்தை ஏற்படுத்தினர் என தெரியவந்தது. இதையடுத்து எப்.ஐ.ஆரிலும் வலிப்பு என்பதை மாற்றி, அஜித்குமார் அடித்து கொல்லப்பட்டார் என திருத்தப்பட்டது. இப்போது இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அஜித்குமார் கொலையில் கைதான தனிப்படை போலீசார் ஐந்து பேரை இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது, மடப்புரம் கடையில் மிளகாய்பொடி வாங்கி, அதை அஜித்குமார் மீது துாவி சித்ரவதை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர். மடப்புரம் கோயில் அருகே உள்ள கடைக்காரர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. தனிப்படை போலீசார் ஒரு பாக்கெட் மிளாய் பொடி மற்றும் இரண்டு தண்ணீர் பாட்டில்கள் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த பேராசிரியை நிகிதாவிடமும் விசாரணை நடந்தது. அப்போது நிகிதா முன்னுக்கு பின் முரணாக பேசி உள்ளார். இதனால் அவரது நகை உண்மையாலுமே திருடப்பட்டதா? அவரது காரில் நகை இருந்ததா? என்கிற சந்தேகம் சிபிஐ அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. அஜித்குமாரிடம் தான் கார் சாவியை கொடுத்தேன். அவர் தான் பாரக்கிங் செய்தார். எனது நகையை அஜித் திருடி இருக்கலாம் என புகார் கொடுத்தார் நிகிதா. ஆனால் அஜித்குமாருடன் சேர்த்து இன்னும் சிலரிடம் கார் சாவி கை மாறி இருப்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாது கார் சாவி இரண்டு முறை பார்க்கிங் செய்ய தரப்பட்டுள்ளது. இது பற்றி நிகிதா போலீசில் சொல்லவில்லை. அது எப்ஐஆரிலும் பதிவு செய்யப்படவில்லை. சிபிஐ விசாரணையில் வெளியான தகவல் படி, நிகிதா இரண்டு முறை கார் சாவியை கொடுத்திருக்கிறார். முதலில் கோயிலுக்கு வந்த நிகிதாவின் காரை அருண்குமார் என்பவர் வாங்கி, இரண்டு நிமிடத்தில் பார்க் செய்துள்ளார். பின்னர் அஜித்குமாரிடம் அவர் கார் சாவியைக் கொடுத்திருக்கிறார். அதை அஜித்குமார் நிகிதாவிடமே கொடுத்துவிட்டார். இரண்டாவதாக காரை பார்க்கிங் பகுதியில் இருந்து எடுப்பதற்காக, அங்கு வேலைபார்த்த கோயில் ஊழியர் கண்ணன் என்பவரிடம் நிகிதா சாவியை கொடுத்துள்ளார். கண்ணன் அந்த சாவியை அஜித்குமாரிடம் கொடுத்திருக்கிறார். அஜித்குமார் அதை தினகர் என்ற நபரிடம் கொடுக்க, தினகர் காரை எட்டு நிமிடத்தில் வெளியே எடுத்துக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். கோவில் பார்க்கிங் பகுதியை விட்டு நிகிதா கார் வெளியே செல்லவே இல்லை என்பதும் சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது. இப்படி பலருக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இருக்கும் நிலையில் அஜித்தை மட்டும் குறி வைத்து ஏன் புகார் தரப்பட்டது என்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அஜித்குமார் மீது நிகிதா அளித்தது பொய் புகாராக இருக்கலாம் என சிபிஐ தரப்புக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது . நிகிதா காணாமல் போனதாக சொன்ன நகைகள் சென்னையில் வாங்கியதாக கூறப்படுகிறது. அது பற்றிய விவரங்களை சேகரிக்கும் பணியில் சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

ஆக 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ