மொத்த கிராமத்தையும் பீதியில் உறைய வைத்த பெண்: திருச்சியில் பரபரப்பு | Chain Snatching | Trichy
இரவு இருட்டில் கேட்ட அலறல் சத்தம் வயலை ரவுண்டு கட்டிய ஊர் மக்கள் திருச்சி, மண்ணச்சநல்லூர், அடுத்த முருங்கப்பட்டியை சேர்ந்தவர் சரோஜா, வயது 48. திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள பூ கடையில் வேலை செய்கிறார். திங்களன்று மாலை வழக்கம்போல வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு கிளம்பினார். சத்திரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து சுக்காம்பட்டி செல்லும் அரசு பஸ்சில் ஏறினார். அப்போது இருந்தே யாரோ பின்தொடர்ந்து வருவது போல தெரிந்துள்ளது. இரவு நேரமாகிவிட்டதால் சரியாக கவனிக்கவில்லை. பஸ் முருங்கப்பட்டி ஸ்டாப்பில் நின்றதும் சரோஜா இறங்கினார். அங்குள்ள வயல் வழியாக வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது இருட்டான பகுதியில் ஒரு பெண் வழி மறித்துள்ளார். சரோஜா கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்துக்கொண்டு ஓடினார். பதறிய அவர், திருடன் திருடன் என கத்தி சத்தம் போட்டுள்ளார். ஊர்மக்கள் வருவதற்கும் மர்ம பெண் வயலுக்குள் சென்று மறைந்தார். அங்கிருந்து தப்பிக்க வேறு வழி எதுவும் இல்லை. வயலுக்குள் நுழையும் வழி முழுவதையும் கிராம மக்கள் சுற்றி வளைத்தனர். உள்ளே பதுங்கி இருந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர். ஊர் பெயர் கூட சரியாக சொல்லமுடியாமல் உளறி உள்ளார். சந்தேகமடைந்த கிராம மக்கள் மண்ணச்சநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அவர் மண்ணச்சநல்லூர் அடுத்த வீரானியை சேர்ந்த லதா என்பது தெரியவந்தது. சரோஜாவிடம் இருந்து அவர் பறித்து சென்றது கவரிங் நகை என போலீசார் தெரிவித்தனர். லதா மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.