மீனவர் வலை மீது ஏறி ரீல்ஸ் எடுத்த இளைஞர்கள் வெறிச்செயல் | Chennai | Fisherman | Reels
சோறு போடும் வலை மீது ஏறாதீங்க ரீல்ஸ் எடுக்க வேற இடம் இல்லையா? தட்டி கேட்ட மீனவர் சீரியஸ் சென்னை திருவொற்றியூர் பட்டினத்தார் கோயில் தெருவை சேர்ந்தவர் தேசப்பன், வயது 29. மீனவர். புதிதாக திறக்கப்பட்ட சூரை மீன்பிடி துறைமுகம் அருகே வலை பின்னிக்கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த இளைஞர்கள் சிலர் கடற்கரை திட்டு மீது நின்று வீடியோ எடுத்துள்ளனர். தாங்கள் கொண்டு வந்திருந்த கத்தியை எடுத்து சுழற்றியபடி போஸ் கொடுத்துள்ளனர். ஆர்வம் மிகுதியால் தேசப்பன் பின்னிக்கொண்டிருந்த வலை மீது ஏறி அட்டகாசம் செய்துள்ளனர். ஆத்திரம் அடைந்த அவர், இது என் தொழிலுக்கு பயன்படுத்தும் வலை. அதன் மீது ஏறி நின்று வீடியோ எடுக்குறீங்களே, அறிவு இல்லையா என கேட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் உண்டானது. வீடியோ எடுக்க வந்த இளைஞர்கள் தேசப்பனை சரமாரியாக கத்தியால் குத்தினர். பலத்த காயங்களுடன் சரிந்த அவரை சக மீனவர்கள் மீட்டு ஸ்டான்லி ஆஸ்பிடலில் சேர்த்தனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்திய திருவொற்றியூர் போலீசார் தாக்குதல் நடத்திய இளைஞர்களை தேடினர். அதே பகுதியை சேர்ந்த வசந்த், பிரதீப், லத்தீஷ் குமார் ஆகிய மூன்று இளைஞர்களை கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு சிறையில் அடைத்தனர். ரீல்ஸ் வீடியோ எடுத்ததை தட்டி கேட்டத்துக்கு மீனவரை கொல்லும் அளவுக்கு இளைஞர்கள் சென்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.