மாயமான மனைவி: தோண்ட தோண்ட வெளிவந்த அதிர்ச்சி | Chennai | Perungudi | Police
சென்னை மந்தவெளியை சேர்ந்தவர் நவீன். மனைவி லட்சுமி. தம்பதிக்கு 11 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஒரு பெண், இரண்டு ஆண் என மூன்று குழந்தைகள் உள்ளனர். இப்போது குழந்தைகள் உறவினர்கள் வீட்டில் வளர்க்கின்றனர். கணவன்-மனைவி இருவரும் பெருங்குடி குப்பை கிடங்கில் வேலை செய்து வந்தனர். இரவில் அங்கே தங்கி குப்பை அள்ளுவது இவர்களது பணியாகும். அங்கேயே ஒரு குடிசை அமைத்து அதில் இருவரும் வாழ்ந்தனர். ஞாயிறன்று வெளியே சென்ற நவீன் இரவு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது லட்சுமி செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாக தெரிகிறது. சந்தேகம் அடைந்த நவீன், யாரிடம் பேசிட்டு இருக்க என கேட்டுள்ளார். வேலை சம்மந்தமாக தான் பேசிட்டு இருக்கேன் என்றாராம் லட்சுமி. இருந்தும் சந்தேகம் தீராத நவீன் செல்போனை பிடிங்கி காதில் வைத்துள்ளார். எதிர்முனையில் பேசியவர் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் லட்சுமியிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அது முற்றி கைகலப்பாக மாறிய நிலையில், நிலமை கை மீறி போனது. அருகே குப்பை தோண்ட வைத்திருந்த கடப்பாரை இருந்துள்ளது. அதை எடுத்து லட்சுமி முகத்தில் சரமாரியாக தாக்கியுள்ளார் நவீன். முகம் சிதைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் சரிந்த லட்சுமி அங்கேயே இறந்தார்.