உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சிட்டியை தாண்டி இறங்கும் கும்பல்: பீதியில் மக்கள் | Chennai | Police | Ganja | Tambaram

சிட்டியை தாண்டி இறங்கும் கும்பல்: பீதியில் மக்கள் | Chennai | Police | Ganja | Tambaram

ஒரு முறை இழுத்துட்டா விட முடியாது கூலி தொழிலாளிகளே முதல் டார்கெட் சென்னையில் அடுத்தடுத்து சம்பவம் தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டாக கஞ்சா விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு முறை இந்த பழக்கத்திற்கு ஆட்பட்டவர்கள், அதிலிருந்து எளிதில் மீள முடியாமல் நிரந்தர வாடிக்கையாளர்களாக மாறி விடுகின்றனர். குறைந்த முதலீடு, மிக அதிக லாபம் என்பதால் கஞ்சா விற்பனையில் இறங்கும் சமூக விரோதிகள் எந்த அளவுக்கும் செல்ல தயாராக உள்ளனர். சமூக விரோத செயலில் ஈடுபடுவோரை கண்டுபிடித்து தண்டிக்க தமிழக காவல் துறை பலகட்ட ஆபரேஷன் நடத்தினாலும் அது பலன் தருவதில்லை. போலீசுக்கு போக்கு காட்டி, நுாதன முறையில் கடத்தி வரப்படும் கஞ்சாவின் விற்பனை, இப்போது சென்னை புறநகர் பகுதியிலும் களைகட்டத் துவங்கியிருப்பது பொது மக்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் தாம்பரம் மற்றும் சுற்றுப் பகுதியில் பல லட்சம் கூலித் தொழிலாளர்கள் வசிக்கின்றனர். இவர்களை மையப்படுத்தி, கஞ்சா விற்பனை இப்போது களைகட்டத் துவங்கி உள்ளது. கடந்த பிப்ரவரி 19ல் வண்டலுார் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மணிகண்டன், சம்பத்குமார், ஆகிய இரு இளைஞர்களை போலீசார் விரட்டிப் பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.விசாரணையில், அவர்கள் கொலைக் குற்றவாளிகள் என்பது தெரியவந்தது. பிப்ரவரி 21ல் கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே விஸ்வநாதன் என்ற வாலிபரிடமிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பிப்ரவரி 23ல், கண்ணகி நகர் சுற்றுப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, ஏழு நபர்களிடமிருந்து 22.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து பிப்ரவரி 25ம் தேதி, தாம்பரத்தில் வடமாநில இளைஞர் டிராலி சூட்கேசில் கடத்தி வந்த 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், ஒடிசாவில் இருந்து ரயில் வாயிலாக கஞ்சாவை கடத்தியது தெரிய வந்தது. கடந்த 4ம் தேதி திரிபுரா மாநிலத்தை சேர்ந்த இளைஞர் கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே, 21 கிலோ கஞ்சாவுடன் போலீசாரிடம் சிக்கினார். மேற்கண்ட அனைவரும், சென்னை, புறநகர் பகுதியில் வசிக்கும் கூலிதொழிலாளிகளை மையப்படுத்தியே, கஞ்சாவை கடத்தி விற்க முயன்றுள்ளது விசாரணையில் தெரியவந்தது. சென்னை நகரத்தை மையப்படுத்தி நடந்து வந்த கஞ்சா விற்பனை, இப்போது புறநகர் பகுதியை குறிவைத்து, நகர துவங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் விற்கப்படும் கஞ்சா, பெரும்பாலும் வட மாநிலங்களிலிருந்து, ரயில் வாயிலாகவே கடத்தி வரப்படுகிறது. இதற்கு துணையாக வடமாநில இளைஞர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். இதில், அதிக லாபத்திற்கு ஆசைப்படும் வட மாநில இளைஞர்கள், அவர்களே ரயிலில் கஞ்சா கடத்தி, நேரடி விற்பனையில் ஈடுபடுகின்றனர். இவர்களின் வாடிக்கையாளர்களாக சென்னையின் புறநகர் பகுதிகளில் வசிக்கும் கூலிதொழிலாளர்கள் உள்ளனர். முக்கியமாக, தாம்பரம், கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுப் பகுதியில், 10 லட்சத்திற்கும் அதிகமான கூலித் தொழிலாளர்கள் வசிக்கின்றனர். இவர்களில், வட மாநிலத்தை சேர்ந்தவர்களும் கணிசமான அளவில் உள்ளனர். குறைந்த செலவில் உச்ச போதை, வாகனத்தில் சென்றாலும், போலீசாரின் சோதனைகளில் சிக்கல் இல்லாது தப்பித்தல் என பல வகைகளில் கஞ்சா சாதகமாக உள்ளது. இதனால் கஞ்சா போதைக்கு ஆட்பட்டவர்களும் அதனை மொத்தமாக வாங்கி வைத்து, சில்லரையாக விற்று வருமானம் பார்க்க துவங்கி உள்ளனர். கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர், ஏற்கனவே பல வழக்குகளில் தொடர்புடைய முன்னாள் குற்றவாளிகளாக உள்ளனர். இவர்கள் சிறையிலிருந்து மீண்டும் வெளியே வராதபடி, கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்கின்றனர் ஆர்வலர்கள்.

மார் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை