அரசு துறைகளிடம் ஒருங்கிணைப்பு இல்லை! | Chennai Air Show | Air Force | TNgovt
விமானப்படையின் 92வது ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி, மெரினா கடற்கரையில் சாகச நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டனர். 15 லட்சம் பார்வையாளர்கள் பங்கேற்பர் என விமானப்படை அதிகாரிகள் முன்கூட்டியே தெரிவித்தனர். விழா பாதுகாப்பு ஏற்பாடு தமிழக அரசின் பொதுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுபோன்ற முக்கிய அரசு விழாக்களுக்கான ஏற்பாடுகளை, பொதுத்துறையுடன் இணைந்து போலீஸ், பொதுப்பணி, நகராட்சி நிர்வாகம், மக்கள் நல்வாழ்வு துறைகள் செய்வது வழக்கம். ஆனால் மெரினா சாகச நிகழ்ச்சிக்கு ஆரம்பம் முதலே, இத்துறைகளிடம் ஒருங்கிணைப்பு இல்லை. தமிழக தலைமை செயலர் முருகானந்தம் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் இது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. மேடை அமைப்பு பணிகளை, பொதுப்பணி துறையினர் செய்து கொடுத்தனர். முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், விமானப்படை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் செய்து தரப்பட்டன. ஆனால் மக்கள் கூட்டத்திற்கு தகுந்தபடி அடிப்படை வசதிகளை, மாநகராட்சி நிர்வாகமும், சுகாதார துறையும் செய்து தரவில்லை. கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் கர்ப்பிணியர், குழந்தைகள், நோயாளிகள் உள்ளிட்டோர் வர வேண்டாம் என, சுகாதார துறை எச்சரிக்கை விடுக்கவில்லை. அவசர உதவி சிகிச்சைகளுக்கும் போதிய அளவில், மக்கள் நல்வாழ்வு துறையால் ஏற்பாடு செய்யப்படவில்லை. பாதுகாப்பு பணியில் 8,000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.