உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கஞ்சா கடத்தல் பின்னணியில் சர்வதேச கும்பல்: பகீர் தகவல் | Chennai Customs | HydroponicGanja

கஞ்சா கடத்தல் பின்னணியில் சர்வதேச கும்பல்: பகீர் தகவல் | Chennai Customs | HydroponicGanja

சென்னை ஏர்போர்ட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்தபடி உள்ளன. சுங்கத்துறை அதிகாரிகள், கடத்தலில் ஈடுபடுவோரை பிடித்து, கஞ்சாவை பறிமுதல் செய்து வருகின்றனர். சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு செல்வது போல, பலர் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் பிடித்தாலும், அவர்களின் பின்னணியில் உள்ளவர்களை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். புதுப்புது வழிகளில் கடத்தல் நடப்பதால், எந்த வியூகத்தை பயன்படுத்தி பிடிப்பது என்று தெரியாமல், அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களில், சென்னை விமான நிலையத்தில், 48 கோடி ரூபாய் மதிப்புள்ள, 48 கிலோ உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடத்தலில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொதுவாக கைது செய்யப்படுவோரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, அதிகாரிகள் சிறையில் அடைப்பார்கள். கடத்தல் பின்னணியில் உள்ளவர்களை பிடிக்க, தனி குழு அமைத்து தேடுவார்கள். ஆனால், சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் சரியான முயற்சி எடுக்காமல் இருப்பதே, கடத்தல் அதிகரிப்பதற்கு காரணம் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால், வரும் நாட்களில் கஞ்சா புழக்கம் தமிழகத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது குறித்து, சுங்கத்துறை அதிகாரிகள் சொல்லும் தகவல் திகைக்க வைக்கிறது. போதைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு, தங்கத்தை விட நான்கு அல்லது ஐந்து மடங்கு கமிஷன் தொகை அதிகமாக கிடைக்கிறது. இதனால் புது வியூகங்களை வகுத்து, கடத்தலில் ஈடுபடுகின்றனர். முன்பு குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிகம் கஞ்சா கடத்தப்படும். கடத்தி வருவோரை எங்களுக்கு கிடைக்கும் உளவு தகவல் அடிப்படையில் பிடித்து விடுவோம். சமீப மாதங்களாக, கடத்தல்காரர்கள் புது வழிமுறையை பின்பற்றுகின்றனர். முன்பு, அதிக அளவில் தாய்லாந்தில் இருந்து நேரடியாக, சென்னை வரும் விமானத்தில் கடத்தல் நடக்கும்; தற்போது தாய்லாந்தில் இருந்து இலங்கை சென்று, அங்கிருந்து சென்னை வரும் விமானத்தில் போதைப் பொருட்களை கடத்தி வருகின்றனர். கடத்தல்காரர்கள் பிடிபட்டாலும், அவர்களின் சர்வதேச நெட்வோர்க் விபரங்களை கண்டறிவது சவாலாக இருக்கிறது என அதிகாரிகள் தெரிவித்தனர். #Ganja #ChennaiCustoms #DrugTrafficking #HydroponicGanja

அக் 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !