கனமழையில் இருந்து வாகனங்களை காப்பாற்ற துடிக்கும் மக்கள் Chennai Flood| Chennai Rain| Velachery Car P
வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயல் வெள்ள பாதிப்புகளை சமாளிக்கவும், மக்களை பாதுகாக்கவும் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தினார். தாழ்வான மற்றும் வெள்ள பாதிப்புக்கு ஆளாகும் என அஞ்சப்படும் பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும், மக்கள் தங்கள் உடமைகளை பாதுகாத்துக்கொள்ளவும் அரசு அறிவுறுத்தி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பருமழையின் போது அதீத பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் சென்னை வேளச்சேரியும் ஒன்று. கனமழைக்குப் பின் மழை நீர் வெளியேற வழியின்றி, வேளச்சேரியின் குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கும். தரைதளம், முதல் தளத்தில் வசிப்போர், 2வது மாடிக்கு சென்று தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்வர். ஆனால், வீட்டு வாசலிலும், சாலைகளிலும் நிற்கும் வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசமாவது ஆண்டுதோறும் தொடரும் அவலமாக உள்ளது. வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை, அரசின் அறிவுறுத்தலால் வேளச்சேரி மக்கள் இம்முறை முன்கூட்டியே உஷாராகியுள்ளனர். வேளச்சேரி விஜயநகர், ராம்நகர், டான்சி நகர், ஏஜிஎஸ் காலனியை ஒட்டிய மடிப்பாக்கம் சதாசிவம் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தோர் தங்கள் வாகனங்களை பத்திரப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் வேளச்சேரி ரயில் நிலையம் அருகில் உள்ள பழைய பாலம் முழுவதும் தங்கள் கார்களை நிறுத்தி வைத்துள்ளனர். அங்கு இடம் இல்லாதவர்கள் வேளச்சேரியில் புதிதாக கட்டப்பட்ட தரமணியில் இருந்து வேளச்சேரி செல்லும் பாலத்தில் முழுவதும் வரிசை கட்டி கார்களை நிறுத்தி வைத்துள்ளனர். போலீசார் தடுக்க முயன்றும் 2 மேம்பாலத்தின் இருபுறமும் கார்கள் வரிசையாக நிறுத்தப்பட்டதால், அவை தற்காலிக கார் பார்க்கிங்காக மாறியுள்ளது. வேறு வழியின்றி போலீசார் மேற்கொண்டு கார்களை நிறுத்தாதபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மழை, வெள்ளம் வடிந்து இயல்பு நிலை திரும்பியதும், எங்கள் கார்களை பாலத்தில் இருந்து இறக்கி வீடுகளுக்கு ஓட்டிச் செல்வோம். இதனால், கார்கள் தண்ணீரில் மூழ்கி பழுதாவது தவிர்க்கப்படும் என அப்பகுதி மக்கள் கூறினர்.