சென்னையில் ரயில் தடம் புரண்டதால் அதிர்ச்சி | chennai train derailed | avadi-beach train derailed
ஆவடியில் இருந்து பீச் ஸ்டேஷனுக்கு இன்று காலை 11 மணி அளவில் பயணிகளுடன் மின்சார ரயில் ஒன்று புறப்பட்டது. 11:30 மணி அளவில் ராயபுரம் ஸ்டேஷன் வந்தது. பயணிகளை ஏற்றி, இறக்கி விட்டு மீண்டும் புறப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன் ரயில் தடம் புரண்டது. சுதாரித்த என்ஜின் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். அச்சத்தில் பயணிகள் அலறியடித்து இறங்கினர். ரயிலின் 4வது பெட்டியில் ஒரு ஜோடி சக்கரம் மட்டும் தடம் புரண்டது. நல்ல வேளையாக யாருக்கும் பாதிப்பு இல்லை. சம்பவ இடத்துக்கு ரயில்வே அதிகாரிகள் விரைந்தனர். 50 ஊழியர்களுடன் ரெக்கவரி இன்ஜின் வரவழைக்கப்பட்டது. தடம் புரண்ட ரயில் பெட்டியை தூக்கி மீண்டும் தண்டவாளத்தில் வைக்கும் பணி நடந்தது. ரயில் சக்கரம் தடம் புரண்ட போது தண்டவாளத்தில் இருந்த காங்கிரீட் கற்கள் சிதறின. இதனால் தண்டவாளத்தில் பராமரிப்பு வேலையும் நடந்தது. விபத்து நடந்த தண்டவாளத்தில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இருப்பினும் எந்த பாதிப்பும் இன்றி மற்ற தண்டவாளங்கள் வழியாக ரயில்கள் இயக்கப்பட்டன. சம்பவம் குறித்து தெற்கு ரயில்வே விளக்கம் அளித்தது. ரயில் தடம் புரண்டபோது மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் தான் சென்றது. எனவே பெரிய அளவில் பாதிப்பு இல்லை. பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. உடனடியாக மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்று ரயில்வே நிர்வாகம் கூறியது.