தொலைநோக்கி உதவியுடன் கண்டு ரசித்த பொதுமக்கள்
சூரிய குடும்பத்தில் உள்ள வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய ஆறு கோள்களும் ஒரே சுற்றுவட்டப்பாதையில் அணிவகுக்கும் அரிய நிகழ்வு துவங்கியுள்ளது. ஒரே நேர்கோட்டில் கோள்கள் அணிவகுப்பதை 25ம் தேதி வரை காண முடியும். வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி கோள்களை வெறும் கண்களாலும் யுரேனஸ், நெப்டியூன் கோள்களை டெலஸ்கோப் உதவியுடனும் காண முடியும். 6 கோள்களையும் தொலைநோக்கி உதவியுடன் மக்கள் துல்லியமாக காண, சென்னை பிர்லா கோளரங்கத்திலும், கோவை கொடிசியா அறிவியல் மையத்திலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில், குவிந்த மக்கள் கோள்களை கண்டு வியந்தனர். கோவை கொடிசியாவில் உள்ள அறிவியல் தொழில்நுட்ப மையத்திலும் மக்கள் ஆர்வத்துடன் கோள்களை கண்டு ரசித்தனர். திருச்சி, வேலுார் மண்டல அறிவியல் தொழில்நுட்ப மையங்களிலும், கோள்களின் நேர்கோட்டு நிகழ்வை, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், தொலைநோக்கி வழியே காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குனர் லெனின் தமிழ் கோவன் கூறினார்.