இந்தியாவின் தாக்குதலில் வீழ்ந்த சீன தயாரிப்புகள் | China HQ 9 | S 400 India | India Pakistan
இந்தியா - பாகிஸ்தான் இடையே அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகள் குறித்து கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங், ராணுவ கமாண்டர் ரகு நாயர் விளக்கம் அளித்தனர். இந்தியாவின் எஸ் 400 வான் பாதுகாப்பு கவசம், பிரமோஸ் ஏவுகணையை ஜேஎப் 17 விமானம் மூலம் சேதப்படுத்தியதாக பாகிஸ்தான் கூறுவது தவறு. மேலும் சிர்சா, ஜம்மு, பதன்கோட், பதிண்டா, நலியா மற்றும் பூஜ் நகரில் உள்ள விமானபடை தளங்கள் சேதப்படுத்தப்பட்டதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது. இந்த தகவலும் முற்றிலும் பொய். பாகிஸ்தானின் ஒவ்வொரு தவறான பிரசாரத்திற்கும் வலிமையான பதில் அளிக்கப்பட்டு உள்ளது. எதிர்காலத்தில் ஏற்படும் மோதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும். நமது நாட்டை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்க எப்போதும் தயார் நிலையில் இருப்போம் என இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவின் S400 வான் பாதுகாப்பு அமைப்பு குறித்து தவறான தகவல் பரப்பப்பட்ட நிலையில் பாகிஸ்தானின் HQ 9 வான் பாதுகாப்பு அமைப்பின் தரம் பற்றிய சந்தேகம் எழுந்துள்ளது. HQ 9 வான் பாதுகாப்பு கவசங்களை கடந்த 2021ல் பாகிஸ்தான் வாங்கியது. இதன்மூலம் எதிரிகளின் போர் விமானங்கள், ட்ரோன்கள், ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து அழிப்போம் என்று பாகிஸ்தான் ராணுவம் கூறி வந்தது. ஆனால், கடந்த 2022 மார்ச் 9ல் இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணை தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தபோது அந்த நாட்டின் HQ 9 வான் பாதுகாப்பு கவசம் தடுக்கவில்லை. அந்த கவச அமைப்பால் பிரம்மோஸ் பாகிஸ்தானுக்குள் ஊடுருவியதைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லை. சீனாவின் HQ 9 வான் பாதுகாப்பு கவசத்தை நம்பி பாகிஸ்தான் முழுமையாக ஏமாந்திருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான சண்டையில் சீனாவின் JF17, J-10CE ரக போர் விமானங்களை பாகிஸ்தான் விமானப் படை பயன்படுத்தியது. ஆனால் சீன போர் விமானங்களால் இந்தியாவின் ரபேல், சுகோய் போர் விமானங்களை எதிர்கொள்ள முடியவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.