இனியும் அடிவாங்க தயாராக இல்லை என்கிறார் டிரம்ப்
வரி விதிப்பை ஆயுதங்களாக பயன்படுத்துவதை நிறுத்துங்க! அமெரிக்காவை எச்சரிக்கும் சீனா டிஸ்க்: இனியும் அடிவாங்க தயாராக இல்லை என்கிறார் டிரம்ப் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு பதிலடியாக அதிக வரி விதிக்கும் முடிவை எடுத்தார் டிரம்ப். இந்தியா, சீனா, பிரிட்டன், ஜப்பான், தென்கொரியா, இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக வரி விதித்தார். சீனா பொருட்களுக்கான வரியை 54 சதவீதம் வரை ஏற்றி விட்டார். இதனால், கோபம் அடைந்த சீனா, அமெரிக்க பொருட்களுக்கு 49 சதவீத வரியை விதித்து பதிலடி கொடுத்தது. இச்சூழலில், அமெரிக்காவின் வரி விதிப்பை நியாயப்படுத்தியுள்ள அதிபர் டிரம்ப், சீனா உள்ளிட்ட பல நாடுகள், எங்களை நிலைத்திருக்க முடியாத அளவுக்கு மோசமாக நடத்தினார்கள். நாங்கள் எதுவும் பேச முடியாதவர்களாவும், உதவி அற்றவர்களாகவும் இருந்தோம். இனியும் நாங்கள் அடிவாங்க தயாராக இல்லை. பல ஆண்டுகால பொருளாதார வீழ்ச்சியை மாற்றி அமைக்க உள்ளோம். முன் எப்போதும் இல்லாத அளவுக்கான வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில்களை மீண்டும் கொண்டு வருவோம். ஏற்கனவே 5 டிரில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது வேகமாக அதிகரிக்கிறது. இது ஒரு பொருளாதார புரட்சி. இதில் வெற்றி பெறுவோம். இது எளிதானது அல்ல என்றாலும், இதன் முடிவு வரலாற்று சிறப்பு மிக்கதாக இருக்கும் என்று அதிபர் டிரம்ப் கூறினார். இதற்கு பதில் அளித்துள்ள சீன வெளியுறவு அமைச்சகம். சீனாவின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு நலன்களை பாதுகாக்க உறுதியான நடவடிக்கை தொடர்ந்து எடுப்போம் என கூறியுள்ளது. அத்துடன், சீனாவின் பொருளாதாரம், வர்த்தகத்தை நசுக்குவதற்கு வரி விதிப்பதை ஒரு ஆயுதமாக பயன்படுத்துவதை அமெரிக்க நிறுத்திக்கொள்ள வேண்டும்; சீன மக்களின் நியாயமான வளர்ச்சி, உரிமைகளை குறைத்து மதிப்பிடுவதை நிறுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளது.