சித்தேரியில் தண்டவாளம் உடைந்தது; தப்பியது மெமு ரயில்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து காட்பாடி வரை செல்லும் மெமுMEMU ரயில் இரவு 9 மணிக்கு புறப்பட்டு, 10.55க்கு காட்பாடி செல்லும். இந்த ரயில் வழக்கம்போல் சித்தேரி ரயில் நிலையத்தில் நின்றுவிட்டு, புறப்பட்டு சென்றது. லூப் லைனில் இருந்து மெயின் லைனுக்கு ரயில் சென்றபோது, தண்டவாளத்தில் வித்தியாசமாக சத்தம் கேட்டதால் சுதாரித்து கொண்ட டிரைவர் உடனே ரயிலை நிறுத்தினார். இறங்கி பார்த்தபோது, தண்டவாளம் உடைந்து இருந்தது. 3வது பெட்டி தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி இருந்தது. டிரைவர் ரயிலை உடனே நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தை சரி செய்யும் பணியில் இறங்கினர். அந்த ரயிலில் வந்த பயணிகள் அவதி அடைந்தனர். மேலும் சென்னையில் இருந்து காட்பாடி, பெங்களூரு செல்லும் ரயில்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.