ஸ்டாலின் திறந்து 6 மாசமாச்சு; இன்னும் வீடு ஒதுக்கப்படாத அவலம் cm m.k.stalin coimbatore slum cleare
கோவை, உக்கடம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 520 தூய்மைப்பணியாளர்களும், வெரைட்டி ஹால் ரோடு குடியிருப்பில் 432 துாய்மை பணியாளர்களும் குடும்பத்துடன் வசித்தனர். புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டித்தருவதாக கூறி, பழைய குடியிருப்புகளை அரசு 2 ஆண்டுக்கு முன் இடித்தது. தூய்மை பணியாளர்கள் தற்காலிகமாக தகர கொட்டகையில் தங்க வைக்கப் பட்டனர். முதல்கட்டமாக, உக்கடத்தில் 222 வீடுகளுடன் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. வெரைட்டி ஹால் ரோட்டில் 192 வீடுகளுடன் குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இந்த வீடுகளை 2024 அக்டோபர் 31ம்தேதி வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். 6 மாதங்களாகியும் இன்னும் பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால் தற்காலிக தகர கொட்டகையில் வசிக்கும் தூய்மை பணியாளர்கள், அமைச்சர் செந்தில்பாலாஜியை சந்தித்து, முறையிட்டனர். தூய்மை பணியாளர்களின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க, மாவட்ட நிர்வாகத்துக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தினார். கோட்டாட்சியர் ராம்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தி, வீடுகளை ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால் அடுக்குமாடி குடியிருப்புகளில் தி.மு.கவை சேர்ந்த துாய்மை பணியாளர்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும். அவர்களுக்கு வீடு ஒதுக்கிய பிறகுதான் மற்ற தூய்மை பணியாளர்களுக்கு ஒதுக்க வேண்டும் என கூறி அதிகாரிகளுக்கு தி.முக லோக்கல் நிர்வாகிகள் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் விரைந்து முடிவெடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறுகின்றனர். குடியிருப்புகளை ஸ்டாலின் திறந்து 6 மாதங்களான பிறகும் இன்னும் பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கப்படாமல் உள்ளது. வீடு ஒதுக்கீடு செய்வதில் ஏற்படும் கால தாமதம் பற்றிய தகவல்கள் தகரகொட்டைகளில் வசிக்கும் தூய்மை பணியாளர்களுக்கு தெரிய வந்தது. கொந்தளித்து எழுந்த துாய்மை பணியாளர்கள் உக்கடத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடு குடியிருப்புக்கு திரண்டு சென்றனர். 50க்கு மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் வீடுகளின் பூட்டை உடைத்து உள்ளே சென்று உட்கார்ந்து கொண்டனர். ஸ்டாலின்தான் வந்தாரு; பூட்டை திறக்க சொன்னாரு என கிண்டலாக பாட்டும் பாடினர். உக்கடம் போலீசாரும் அதிகாரிகளும் விரைந்துசென்று வீடுகளுக்குள் நுழைந்த தூய்மை பணியாளர்களை வெளியேற்றினர். அப்போது போலீசாரின் வாகனத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து வேண்டும் வேண்டும் வீடு வேண்டும் என தூய்மை பணியாளர்கள் கோஷமிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களுடன் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். விரைவில் வீடுகள் ஒதுக்கப்படும் என உறுதியளித்தனர். ஏற்கனவே வீடு ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு வீடு ஒதுக்கக்கூடாது; ஆளுங்கட்சி எதிர்கட்சி என தூய்மை பணியாளர்களை பிரித்துபார்க்காமல் நியாயமான முறையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தூய்மை பணியாளர்கள் வலியுறுத்தினர். கோரிக்கையை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டதை அடுத்து, போராட்டத்தை தூய்மை பணியாளர்கள் கைவிட்டனர்.