ரங்கசாமி அறிவித்த புதிய திட்டங்கள் என்னென்ன? | Budger 2024 | CM Rangasamy | Puducherry | New schemes
₹12,700 கோடி பட்ஜெட் பரபரக்கும் புதுச்சேரி மாணவர்கள், மீனவர்களுக்கு குட் நியூஸ் புதுச்சேரி சட்டசபையில் 2024 - 25ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி 12,700 கோடி ரூபாய்க்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் 10,969.80 கோடி ரூபாய் வருவாய் செலவினங்களுக்காகவும், 1730.20 கோடி ரூபாய் மூலதன செலவினங்களுக்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது 2574 கோடி ரூபாய் சம்பளம் வழங்கவும், 1388 கோடி ரூபாய் ஓய்வூதியங்களுக்கும் 1517 கோடி கடன், வட்டி செலுத்தவும், 2503 கோடி மின் சாதனம் வாங்கவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். முதியோர் ஓய்வூதியம், குடும்ப தலைவி நிதியுதவி, கேஸ் சிலிண்டர் மானியம் உள்ளிட்ட பிற நலத்திட்டங்களுக்கு 1900 கோடியும், அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தன்னாட்சி உயர்கல்வி நிறுவனங்களுக்கு 420 கோடியும், பொதுத்துறை, கூட்டுறவு நிறுவனங்களுக்கு மானிய கொடையாக 1082 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறிய முதல்வர் ரங்கசாமி, பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள துறை வாரியான மானிய கோரிக்கைகளை சமர்ப்பித்தார். கால்நடைத்துறை மூலம் 100% மானியத்தில் உயர் மரபணு திறன் கொண்ட ஆயிரம் பெண் கன்றுகள் உற்பத்தி செய்யப்படும். மாடி தோட்டம் அமைக்க ஆடிப்பட்டம் மூலம் ஒரு வீட்டிற்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும். ரேஷன் கடைகள் மூலம் நடப்பு நிதியாண்டு முதல் இலவச அரிசி, மானிய விலையில் பருப்பு, கோதுமை, சர்க்கரை, சமையல் எண்ணெய் ஆகிய உணவு பொருட்கள் வழங்கப்படும். பிராந்திய அளவில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 20,000, 15,000, 10,000 என ஊக்கத்தொகை வழங்கப்படும்.