போதை கும்பலை கொத்தாக தூக்கியது மத்திய புலனாய்வு பிரிவு Cocaine| rs-6 Crore |seized | Chennai |
சென்னையில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலையடுத்து, அமலாக்கத்துறையின் மத்திய குற்ற புலனாய்வு போலீசார், பல இடங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். சென்னை பரங்கிமலை பகுதியில் போதை கடத்தலில் ஈடுபட்ட5 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து 1 கிலோ கோகைன் பறிமுதல் செய்யப்பட்டது. 5 பேரும் கைது செய்யப்பட்டு, அவர்கள் பயன்படுத்திய கார், 5 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 5 பேரும் ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையை சேர்ந்தவர்கள். அவர்கள் கொடுத்த தகவல்படி, கீழக்கரையை சேர்ந்த மேலும் 3 பேர் கோயம்பேடில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்தும் 1 கிலோ கோகைன் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மொத்த மதிப்பு 6 கோடி ரூபாய். 8 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதன் பின்னணி தெரியவந்தது. ராமநாதபுரம் பீச்சில் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பவர்கள் பாண்டி மற்றும் பழனீஸ்வரன். இவர்கள் இருவருக்கும் தலா 1 கிலோ கோகைன் பாக்கெட் கிடைத்ததாக சொல்லி இருக்கிறார்கள். அதனை பாண்டியின் உறவினர், சாயல்குடியை சேர்ந்த வனக்காவலர் மகேந்திரனிடம் கொடுத்துள்ளனர். அவர் அதிக தொகைக்கு விற்றுதருமாறு சென்னை கீழக்கரையை சேர்ந்த காசிம் என்பவரை அணுகி இருக்கிறார். கோகைன் விற்பதற்கு காசிமுக்கு உதவியாக முபாரக், எட்வர்டு சாம், இட்ரிஸ், காஜா மொகதீன் ஆகியோர் செயல்பட்டு உள்ளனர். ஆனால், உண்மையில் கோகைன் போதை பொருள் பாக்கெட்டுகள் ராமநாதபுரம் பீச் குப்பையில் தான் கிடைத்ததா? அல்லது சர்வதேச போதை கும்பலுக்கு இதில் தொடர்பு இருக்கிறதா என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. இது தொடர்பாகவும் தனியாக விசாரணை நடக்கிறது.