கோவையில் 2000kg ஜெலட்டின் சிக்கிய அதிர்ச்சி | coimbatore | anti terrorism squad | gelatine sticks
கோவையை உலுக்கிய குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து, அங்கு தீவிராத தடுப்பு பிரிவை தமிழக காவல் துறை அமைத்தது. பயங்கரவாத பின்னணி தொடர்பாக தொடர்ந்து ரகசியமாக விசாரணை மற்றும் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பெரிய அளவில் வெடிபொருட்கள் கடத்தப்படுவதாக கோவை தீவிரவாத பிரிவுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். மதுக்கரை அருகே வாகன சோதனை நடத்திய தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார், சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்த ஒரு சரக்கு வேனை மடக்கி சோதித்தனர். உள்ளே பெட்டிப்பெட்டியாக வெடிபொருட்கள் இருந்தன. மொத்தம் 2 ஆயிரம் கிலோவுக்கு ஜெலட்டின் குச்சிகள் இருந்தது. வெடிபொருட்களை லாரியுடன் போலீசார் கைப்பற்றி, மதுக்கரை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். வேனை ஓட்டி வந்த டிரைவர் சுபேரிடம் விசாரித்தனர். கேரளாவில் பல இடங்களில் மலைகளை உடைக்கும் கல்குவாரிகளுக்கு தான் ஜெலட்டின் குச்சிகள் கொண்டு செல்லப்படுவதாக அவர் சொன்னார். இதற்கு உரிமம் இருக்கிறதா? 2 ஆயிரம் கிலோ அளவுக்கு கொண்டு செல்கிறீர்கள். ஆவணம் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினர். ஓனருக்கு தான் மற்ற விவரம் தெரியும் என்று டிரைவர் சொன்னதால், ஓனரை ஸ்டேஷன் வரும்படி போலீசார் அழைத்து இருக்கின்றனர். ஒரே நேரத்தில் 2 ஆயிரம் கிலோ ஜெலட்டின் குச்சிகளை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைப்பற்றி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.