உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாஷா இறுதி ஊர்வலத்தால் கோவை முழுதும் குவிக்கப்பட்ட போலீசார் | Coimbatore bomb blast | Basha

பாஷா இறுதி ஊர்வலத்தால் கோவை முழுதும் குவிக்கப்பட்ட போலீசார் | Coimbatore bomb blast | Basha

கோவையில் 1998 பிப்ரவரி 14ல் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. காந்திபுரம், அரசு மருத்துவமனை, டவுன்ஹால், ஆர்எஸ்புரம் உள்ளிட்ட 18-க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 50 பேர் பலியான நிலையில், 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியது அல்-உம்மா அமைப்பை சேர்ந்தவர்கள் என போலீசார் கண்டுபிடித்தனர். அந்த அமைப்பின் தலைவர் பாஷா, செயலாளர் அன்சாரி, உள்ளிட்ட 160க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அல்-உம்மா அமைப்பு தடை செய்யப்பட்டது. குண்டு வெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட பாஷா உள்பட 30 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 25 ஆண்டுகளாக சிறையில் இருந்த பாஷா, கடந்த ஏப்ரல் 18ல் பரோலில் வந்தார். இருதய கோளாறு, நுரையீரல் தொற்று உள்ளிட்ட பிரச்னைகளால் தனியார் ஆஸ்பிடலில் பாஷா அட்மிட் செய்யப்பட்டார். சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வெடுத்த அவருக்கு, மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஞாயிற்றுக்கிழமை கோவை பீளமேட்டில் உள்ள தனியார் ஆஸ்பிடலில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி திங்களன்று பாஷா இறந்தார். அவருக்கு வயது 72. உக்கடம் ரோஸ் கார்டன் பகுதியில் உள்ள அவரது மகன் இல்லத்தில் பாஷா உடல் வைக்கப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளி பாஷா இறந்ததால், அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பாஷாவின் இறுதி சடங்கு இன்று மாலை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள திப்புசுல்தான் கபர்கஸ்தானில் நடக்கிறது. குண்டுவெடிப்பு நடத்தி 50க்கும் மேற்பட்டோரை கொலை செய்து தண்டனை பெற்ற ஒருவரை, தியாகியாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர். எனவே பாஷாவின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்க கூடாது என இந்து அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் கோவை நகர் முழுதும் பதற்றம் நிலவுகிறது. இறுதி ஊர்வலத்தின்போது அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தவிர்க்க மாநகர போலீசார் மற்றும் மத்திய அதிவிரைவு படையினர் என 3000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதற்காக 200க்கும் மேற்பட்ட அதிவிரைவு படை போலீசார் கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தடைந்தனர். இறுதி ஊர்வலம் நடக்கும் சாலையில் அவர்கள் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

டிச 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ