என்ஐஏ குற்றப்பத்திரிகையில் இடம்பெற்ற ஷாக் தகவல் | Coimbatore car bomb | ISIS recruitment case
ISISக்கு ஆள் சேர்த்த வழக்கில் அதிரடி காட்டிய என்ஐஏ! 2022 அக்டோபரில் கோவை கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் அருகே கார் குண்டு வெடித்து சிதறிய சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை கையில் எடுத்த என்ஐஏ அதிகாரிகள், இதுவரை 14 பேரை கைது செய்துள்ளனர். கோவை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர் சோதனை நடத்திய என்ஐஏ அதிகாரிகள், பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். அதில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை திரட்ட மூளைச்சலவை செய்தது தொடர்பான வாசகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுதொடர்பாக தனியாக வழக்குப் பதிவு செய்த என்.ஐ.ஏ. அதிகாரிகள், ஜமீல் பாஷா, முகமது உசேன், இர்ஷாத், சையது அப்துல் ரகுமான் ஆகிய 4 பேரை சில மாதங்களுக்கு முன்பு கைது செய்தனர். அவர்களை காவலில் எடுத்து விசாரித்த நிலையில், 4 பேர் மீதும் சென்னை பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆட்கள் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஜமீல் பாஷா, முகமது உசேன், இர்ஷாத், சையது அப்துல் ரகுமான் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் நடந்த விசாரணையில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் ஏற்கனவே சேர்ந்திருந்த இவர்கள், அரபி வகுப்புகள் நடத்துவது போல மாணவர்களை வரவழைத்து மூளை சலவை செய்து ஐஎஸ் அமைப்பிற்கு சேர்த்துள்ளனர். இந்த திட்டத்திற்கு முக்கிய நபராக செயல்பட்டது ஜமீல் பாஷா என்பது தெரியவந்தது. இவர் அரபி வகுப்புகள் நடத்துவதாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனி அமைப்புகளை ஆரம்பித்து ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு ஆட்கள் சேர்த்து வந்துள்ளார். கோவையில் இர்ஷாத், முகமது உசைனை அரபி வகுப்பு என்ற பெயரில் ஆட்கள் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தியதாகவும் கூறப்படுகிறது.