டில்லியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் மேலிடம் அதிரடி! Congress|DMK Alliance|2026 Election
வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு குறைந்த தொகுதிகள் ஒதுக்கினால், மாற்று அணி அமைக்கத் தயாராக இருக்க வேண்டும் என, தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரிடம், டில்லி மேலிடம் ஆலோசித்த தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து, தமிழக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது: கிரிஷ் சோடங்கர் நேற்று, கிராம காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் குறித்து, மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் கட்சியின் முன்னாள் எம்.பி.யான பீட்டர் அல்போன்சை சந்தித்துப் பேச திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. அவர் கோவாவிலிருந்து திடீரென புறப்பட்டு டில்லி சென்றார். அங்கு சோனியா, ராகுல், கார்கே, கே.சி.வேணுகோபால் நடத்திய, ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். மாவட்டத் தலைவர்களை தேர்வு செய்யும்போது, அவர்கள் ஏற்கனவே இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவி வகித்திருக்க வேண்டும்; பெரும்பான்மை ஜாதியை சேர்ந்தவராக இருந்தாலும், அவர் சார்ந்த சமுதாய மக்கள் ஆதரவு உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்; தலைமைப்பண்பு உள்ளவரை தேர்வு செய்ய வேண்டும் என, கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அடுத்தாண்டு நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் நீடிப்பதில் தவறில்லை. ஆனால், இம்முறை அதிக தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டும். ஒருவேளை குறைந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் பட்சத்தில், காங்கிரஸ் தலைமையில் மாற்று அணி உருவாக்கத் தயாராக இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து, கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தமிழக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.