ஆஸ்பிடலிலும் அட்டூழியம்: போலீஸ்காரர் சிறையில் அடைப்பு | Constable stands nude before policewomen
போதையில் போலீஸ் செய்த வேலை அலறியடித்து ஓடிய பெண் போலீஸ் போலீஸ் ஸ்டேஷனில் பயங்கர ரகளை வேலூர் மாவட்டம் காட்பாடி விருதம்பட்டு போலீஸ் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்தவர் அருண் கண்மணி. சம்பவத்தன்று இவர் மது குடித்துவிட்டு பைக்கில் குடியாத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தார். கேவி குப்பம் பஸ் நிலையம் அருகே சென்றபோது எதிரே வந்த மினி வேனை கையை காட்டி மடக்கினார். மினி வேன் டிரைவரை எதற்கு என் வண்டி மீது மோதுவது போல வந்தாய் என கேட்டு திட்டினார். டிரைவரை வண்டியை விட்டு இறக்கி கே வி குப்பம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றார். வண்டியை ரேஷ் டிரைவிங் செய்றான்; இவன் மீது வழக்கு போடுங்கள் என பணியில் இருந்த கான்ஸ்டபிள் நந்தினியிடம் சொன்னார். அருண் கண்மணி போதையில் இருப்பதைப் பார்த்த நந்தினி, உடனே இன்ஸ்பெக்டருக்கு தகவல் கொடுத்தார். சில நிமிடங்கள் கழித்து அருண் கண்மணி நான் சொல்லியும் இன்னும் வழக்கு போடலியா? என கூறி நந்தினியை திட்டியுள்ளார். திடீரென தான் அணிந்திருந்த துணிகளை கழற்றி வீசி விட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளார். பயந்துபோன கான்ஸ்டபிள் நந்தினி அலறி அடித்துக் கொண்டு போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே ஓடினார். இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் வந்து அருண் கண்மணியை மடக்கிப்பிடித்தார். துணிகளை அணிவித்து, மது பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்குசென்ற பிறகும் அருண் கண்மணி அடங்கவில்லை. மருத்துவமனையின் கண்ணாடி கதவுகளை உடைத்துள்ளார். அதில் அவருக்கே கையில் காயம் ஏற்பட்டது. சிகிச்சை அளிக்க வந்த டாக்டரையும் தகாத வார்த்தைகளால் திட்டி ரகளை செய்துள்ளார். போலீஸ்காரரின் அட்ராசிட்டியால் மருத்துவமனையில் பரபரப்பான சூழல் நிலவியது. அதைத் தொடர்ந்து, பணி செய்ய விடாமல் அவதூறாக பேசியதாக, குடியாத்தம் போலீசில் டாக்டர் புகார் அளித்தார். அதனடிப்படையில் குடியாத்தம் போலீசார் அருண் கண்மணி மீது வழக்கு பதிவு செய்தனர். வேன் டிரைவரை மிரட்டியது, போலீஸ் நிலையத்தில் நிர்வாணமாக பெண் போலீசிடம் ரகளையில் ஈடுபட்டதற்காக கேவிகுப்பம் போலீஸ் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2 போலீஸ் நிலையத்திலும் மொத்தம் 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அருண் கண்மணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அருண் கண்மணி சில மாதங்களுக்கு முன் குடியாத்தம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்தபோது போதையில் பானிபூரி வியாபாரியிடம் தகராறு செய்ததற்காக, சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தண்டனை காலம் முடிந்து விருதம்பட்டு போலீஸ் நிலையத்தில் பணியில் சேர்ந்த சில மாதங்களில் மீண்டும் குடித்துவிட்டு ரகளை செய்து சிறைக்கு போனார். இதுபோல பல ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்ட அருண் கண்மணி மீது இலாகாப்பூர்வமாக கடும் நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.