இட ஒதுக்கீடுக்காக மதம் மாறுவதை ஏற்க முடியாது: சுப்ரீம் கோர்ட் | Converting religion | Government
அரசு வேலை ஆதாயம் பெற மதம் மாறுவது பெரும் மோசடி சுப்ரீம் கோர்ட் அதிரடி புதுச்சேரியை சேர்ந்த செல்வராணி என்பவர், 2015ல் மாநில அரசின் உயர்நிலை எழுத்தர் வேலையில் சேர விரும்பினார். பட்டியல் இன இட ஒதுக்கீட்டில் அந்த வேலை சுலபமாக கிடைக்கும் என கருதி, எஸ்.சி ஜாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தார். அவரது தந்தை இந்து மதத்தில் வள்ளுவன் எனும் எஸ்.சி பிரிவைச் சேர்ந்தவர். தாய் கிறிஸ்துவர். தந்தையின் ஜாதி அடிப்படையில், எஸ்.சி சான்றிதழ் கேட்ட அவரது கோரிக்கையை அரசு ஏற்கவில்லை. எஸ்.சி ஜாதி சான்றிதழ் தர அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஐகோர்ட் அதை தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் சென்றார். நீதிபதிகள் பங்கஜ் மிட்டல், ஆர்.மகாதேவன் விசாரித்து வந்த நிலையில், நீதிபதி மகாதேவன் தீர்ப்பை அறிவித்தார். மனுதாரரின் தந்தை இந்து எஸ்.சி பிரிவைச் சேர்ந்தவர். ஆனால், பின்னர் கிறிஸ்துவராக மாறியுள்ளார். தாய் கிறிஸ்துவர். மனுதாரர் குழந்தையிலேயே ஞானஸ்நானம் செய்யப்பட்ட கிறிஸ்துவர். அரசு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக தானும், தன் குடும்பமும் இந்து என்றும், இந்து மதத்தை பின்பற்றுவதாகவும் கூறுகிறார். இதை ஏற்க முடியாது. இந்த வழக்கில் தாக்கல் செய்துள்ள அனைத்து ஆதாரங்களின்படியும், மனுதாரர் பிறப்பு, வளர்ப்பு எல்லாமே கிறிஸ்துவ முறைப்படியே நடந்துள்ளது தெளிவாகிறது. அவர் இந்துவாக மாறியதற்கான எந்த ஆவணத்தையும் காட்ட முடியவில்லை. ஒரு மதத்தின் கொள்கை, கோட்பாடுகள், அதன் ஆன்மிக சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, எவரும் அந்த மதத்துக்கு மாறலாம். அது அவர் உரிமை.