கூல் லிப் போதை பொருளை ஏன் தடை செய்ய கூடாது? : ஐகோர்ட் | Cool lip | Why not ban across india |
தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிக அருகே கூல் லிப் போதைப்பொருள் விற்பனை செய்வது தொடர்பாக பலரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் கைதானவர் ஜாமின் கோரி ஐகோர்ட் மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி பரத சக்ரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி, தமிழகத்தில் கூல் லிப் போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்த வழக்குகளில் ஜாமீன் கோரி ஏராளமானோர் மனுத் தாக்கல் செய்கின்றனர். குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்கள், இந்த போதை பொருளுக்கு அடிமையாக இருப்பது தெரிய வருகிறது. தமிழகத்தில், கூல் லிப் போன்ற போதை பொருளுக்கு தடை இருந்தாலும், மற்ற மாநிலங்களில் அனுமதிக்கப்படுகிறது. அதை தயாரிக்கும் நிறுவனங்களில் இருந்து ஜிஎஸ்டி வரியே வசூலிக்கப்படுகிறது. சமீப காலமாக பள்ளி மாணவர்கள் சண்டையிடும் சம்பவங்கள் அதிகரிக்க, இதுபோன்ற போதப் பொருள் பயன்பாடு அதிகரித்ததே காரணம். இளம் தலைமுறையினரின் சிந்திக்கும் திறன், இதனால் முற்றிலுமாக மறைந்து வருகிறது. நமது குழந்தைகளை நாம் எப்படி பாதுகாக்க போகிறோம்?. தொடர்ச்சியாக போதை பொருள் விற்பவர்களை கைது செய்கிறோம், கடையும் மூடப்படுகிறது. பின்னர் ஜாமீனில் வெளியே வந்துவிடுகிறார்கள். 15 நாட்களுக்கு பின்னர் கடையும் வழக்கம்போல் செயல்பட தொடங்குகிறது. போதை பொருள் பயன்படுத்துவதால் பாதிக்கும் மாணவர்களுக்கு கவுன்சிலிங், மருத்துவ பரிசோதனை போன்று எவ்விதமான நடவடிக்கை எடுக்கலாம் என முடிவு செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் கூல் லிப் போதைப் பொருள் பயன்படுத்துவோர் இருப்பதாக தெரிகிறது. எனவே, இந்த போதை பொருளை பாதுகாப்பற்ற உணவு பொருளாக அறிவித்து, அதனை இந்தியா முழுவதும் ஏன் தடை செய்யக்கூடாது? எனவும் நீதிபதி பரத சக்ரவர்த்தி கேட்டார். இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் உரிய விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை 20ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.