உலக வங்கி நிதி உதவிக்காக காத்திருக்கும் சென்னை மாநகராட்சி | Chennai corporation | New drainage | Wai
2015 வெள்ள பாதிப்புக்கு பின், சென்னையின் மைய பகுதிகளில் ஒருங்கிணைந்த கூவம் வடிகால்கள் அமைக்கப்பட்டன. அவை பெரும்பாலும் 5 செ.மீ., மழையை எதிர்கொள்ளும் அளவிற்கு கட்டப்பட்டன. இருப்பினும் ஒவ்வொரு மழைக்கும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதால், ஒருங்கிணைந்த கொசஸ்தலையாறு வடிநிலைப்பகுதி திட்டம், கோவளம் வடிகால் திட்ட பணிகள் அடிப்படையில், மாநகராட்சியின் விரிவாக்க பகுதிகளில், மழைநீர் வடிகால் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை 3,048 கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால் கட்டமைப்பு உள்ளது. இவற்றில், புதிதாக அமைக்கப்படும் வடிகால்கள், ஒரு மணி நேரத்திற்கு 7 முதல் 10 செ.மீ மழையை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. நிலப்பரப்பின் தன்மைக்கு ஏற்பவும், வடிநில பகுதிகளுக்கு ஏற்பவும் தாழ்வான முறையில் அமைக்கப்படுகிறது. ஆனாலும் மழைநீர் வடிகால் கட்டமைப்பு இருக்கும் பகுதிகளிலும், நீர்தேங்குவதற்கான காரணம் குறித்து, மாநகராட்சி சமீபத்தில் ஆய்வு நடத்தியது. சென்னையின் மைய பகுதிகளில் ஆங்கிலேயேர் காலத்திலும், அதற்கு பின் 50 ஆண்டுகளுக்கு முன்பும் கட்டப்பட்ட கால்வாய் தான் பயன்பாட்டில் உள்ளது. இவற்றில் தண்ணீர் செல்வதில் தடை இருப்பதும் ஆய்வில் தெரிந்தது. பழைய கால்வாய்களை அகற்றி, புதுப்பிக்க மாநகராட்சி திட்டமிட்டாலும், தற்போதைய சூழலுக்கு ஏற்ப கழிவுநீர், மழைநீர் செல்ல தனி தனி பாதை அமைக்க வேண்டியுள்ளது. இதற்கு செலவும் அதிகமாகும் என்பதால் 1,000 கி.மீட்டருக்கு புதிய கால்வாய் கட்ட, உலக வங்கியிடம் நிதியுதவி கேட்க திட்டமிட்டுள்ளது. அதேபோல் பழைய கால்வாய்களை இடித்து அகற்ற வேண்டுமென்றால், கழிவுநீர் செல்ல மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.