உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விசிக நிர்வாகி கள்ளநோட்டு வழக்கில் திருப்பம் | Counterfeit money | VCK

விசிக நிர்வாகி கள்ளநோட்டு வழக்கில் திருப்பம் | Counterfeit money | VCK

கடலுார் மாவட்டம் ராமநத்தம் அடுத்த அதர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம், வயது 40. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலுார் மேற்கு மாவட்ட பொருளாளராக பதவி வகித்தார். இவருக்கும், ஆவட்டியை சேர்ந்த சங்கர் என்பவருக்கும் முன்விரோத வழக்கு ராமநத்தம் போலீஸ் ஸ்டேஷனில் பதியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரிக்க திங்களன்று காலை 5 மணிக்கு செல்வம் வீட்டிற்கு ராமநத்தம் போலீசார் சென்றனர். அங்கு செல்வம் இல்லாததால், வயலில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர். போலீசார் வருவதை அறிந்த செல்வம் மற்றும் ஒரு கும்பல் தப்பியோடியது. சந்தேகமடைந்த போலீசார், செல்வத்தின் தோட்டத்து வீட்டை சோதனை செய்தனர். அங்கு, கள்ள நோட்டுகள் அச்சடிக்கும் இயந்திரம், துப்பாக்கி, போலீஸ் சீருடை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, செல்வத்தின் வயலில் உள்ள வீட்டிற்கு வந்த ஒருவரையும், அதர்நத்தம் வீட்டிற்கு வந்த மற்றொருவரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் நவீன்ராஜா, கார்த்திகேயன் என்பதும், இருவரும் இரண்டு ஆண்டுகளாக செல்வத்திடம் கார் டிரைவராக வேலை செய்ததும் தெரிய வந்தது. அவர்களிடம், 85,000 ரூபாய் கள்ள நோட்டுகள், நான்கு வாக்கி டாக்கி, இரு ஏர்கன், லேப்டாப், போலீஸ் சீருடை, ரிசர்வ் வங்கி முத்திரை, கார், லாரிகள், பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். நவீன்ராஜ், கார்த்திகேயன் இருவரையும் கைது செய்த போலீசார் தப்பி ஓடிய செல்வம் உட்பட 11 பேரை பிடிக்க தனி படை அமைத்தனர். கள்ள நோட்டு அச்சடிக்கப்பட்ட வழக்கில் செல்வம் தொடர்பில் இருந்ததால் அவர் விடுதலை சிறுத்தை கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். செல்வத்துக்கு சென்னையிலும் ஒரு தனியார் கம்பெனி உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. அங்கும் சோதனை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். கள்ளநோட்டு அச்சடித்த கும்பலை பிடிக்க இன்ஸ்பெக்டர் அருள் வடிவழகன், சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஜம்புலிங்கம் கோபிநாத் ஆகியோர் தலைமையில் மூன்று தனி படை அமைக்கப்பட்டுள்ளது. இப்போது வழக்கில் தொடர்புடைய வடிவேல் பிள்ளை, சக்திவேல், அரவிந்த் அஜித் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடக்கிறது.

ஏப் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி