உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பெண் ராணுவ அதிகாரியை விமர்சித்த அமைச்சருக்கு கோர்ட் கண்டனம் minister vijay shah| sofiya qureshi| pa

பெண் ராணுவ அதிகாரியை விமர்சித்த அமைச்சருக்கு கோர்ட் கண்டனம் minister vijay shah| sofiya qureshi| pa

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது தொடர்பான விவரங்களை ஊடகங்களுக்கு விளக்கம் அளித்தவர்களில் ராணுவ அதிகாரி கர்னல் சோபியா குரோஷியும் ஒருவர். இவரை பற்றி மத்திய பிரதேசத்தின் பழங்குடியின நல அமைச்சர் விஜய் ஷா, பொதுக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். பஹல்காமில் நமது சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவர்களை, அவர்களின் சகோதரியை வைத்தே பிரதமர் ஒழித்துவிட்டார் என விஜய் ஷா பேசினார். பயங்கரவாதிகளின் சகோதரி என பொருள்படும்படி அவர் பேசியது சர்ச்சையானது. தாமாக முன்வந்து விசாரித்த மத்திய பிரதேச ஐகோர்ட், அமைச்சர் மீது வழக்குப்பதிய உத்தரவிட்டது. வழக்கும் பதியப்பட்டது. இதை ரத்து செய்யக்கோரி அமைச்சர் விஜய் ஷா சுப்ரீம் கோர்ட்டுக்கு போனார். இந்த வழக்கை நீதிபதிகள் சூர்ய காந்த், கோடீஸ்வர் சிங் அமர்வு விசாரித்தது. அமைச்சர் வெளியிட்ட மன்னிப்பு வீடியோவை நீதிபதிகள் விமர்சித்தனர். இது என்ன மாதிரியான மன்னிப்பு; உங்கள் மன்னிப்பில் உண்மையில்லை. மன்னிப்பு கேட்க ஒரு அர்த்தம் இருக்கிறது. அது முதலைக்கண்ணீர்; உங்கள் மன்னிப்பு தேவையில்லை. வழக்கு மற்றும் பின்விளைவுகளில் இருந்து தப்பிக்க மன்னிப்பு வீடியோ வெளியிட்டுள்ளதாக கண்டித்தனர். அனுபவம் மிக்க அரசியல்வாதி பொதுவெளியில் வார்த்தைகளை பார்த்து பேச வேண்டும். நாடே உங்களை பார்த்து வெட்கப்படுகிறது என நீதிபதிகள் கூறினர். அமைச்சர் விஜய் ஷா மீது பதியப்பட்ட வழக்கை விசாரிக்க 3 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்க மத்திய பிரதேச அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 3 அதிகாரிகளும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்; அதில் ஒரு பெண் அதிகாரி இடம்பெற வேண்டும் என்று உத்தரவில் கூறியுள்ளனர். சிறப்பு விசாரணைக்குழு தமது அறிக்கையை வரும் 28ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணை முடியும் வரை அமைச்சரை கைது செய்ய இடைக்கால தடை விதித்தனர்.

மே 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !