பட்டாசு ஆலை தரைமட்டம்: தர்மபுரியில் 3 பெண்கள் உயிரிழப்பு cracker unit fire blast 3 women dies 1 w
தமிழக பட்டாசு ஆலைகளில் தீ விபத்து தொடர்கதையாக உள்ளது. பாதுகாப்பான பணிச்சூழல் இல்லாததால் அப்பாவி தொழிலாளர்கள் பலர் உயிரிழக்கின்றனர். இப்போது தர்மபுரி மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் நடந்த தீவிபத்து 3 உயிர்களை குடித்திருக்கிறது. தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்த சின்னமுறுக்கம்பட்டியில் பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த சின்னதுரை என்பவர் இதை நடத்தி வருகிறார். வழக்கம் போல இன்று 4 பெண்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். பிற்பகல் 3 மணியளவில் பட்டாசு தயாரிக்க பயன்படும் வெடிபொருட்கள் உரசியதில் தீவிபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில் பட்டாசு ஆலை முழுவதுமாக தரைமட்டமானது. செண்பகம், திருமலர், மஞ்சு ஆகிய 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். திருமலரும் மஞ்சுவும் உடன்பிறந்த சகோதரிகள் ஆவர். பட்டாசுகள் வெடிப்பதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்தான் ஒரு பெண், பசிக்கிறது சாப்பிட்டு விட்டு வருகிறேன் என கூறிவிட்டுச் செனறார். இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கம்பைநல்லூர் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். தர்மபுரி கலெக்டர் சதீஷ் விபத்து நடந்த பட்டாசு ஆலையை பார்வையிட்டார்.