ஆபரேசன் அகழி; ரவுடிகளுக்கு கிலி | Crime | Trichy rowdy Arrested | SP Varun Kumar
திருச்சியின் பிரபல ரவுடி குடும்பத்துடன் கைது! பின்னணி என்ன? திருச்சியில் பிரபல ரவுடிகள் போலி ஆவணங்களை தயாரித்து தங்கள் சொத்துக்களை பறிப்பதாக திருச்சி எஸ்பி வருண் குமாரிடம் பலர் புகார் அளித்தனர். இதை தடுக்க கடந்த 19ம் தேதி ஆப்ரேஷன் அகழி தொடங்கப்பட்டது. ஒரு குழுவுக்கு ஒரு இன்ஸ்பெக்டர் என்ற விதத்தில் 56 போலீசார் அடங்கிய 14 குழுக்கள் அமைக்கப்பட்டது. 21ம் தேதி திருச்சியில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர். திருவெறும்பூர் அருகே உள்ள நத்தமாடிப்பட்டியை சேர்ந்த பிரபல ரவுடி மைக்கேல் சுரேஷ் என்ற பட்டறை சுரேஷ் வீட்டில் கணக்கில் வராத 66 அசல் பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன. இது அனைத்தும் கட்டப்பஞ்சாயத்து, கந்து வட்டி தொழில் மூலமாக மிரட்டி பெறப்பட்டவை என்பது விசாரணையில் தெரிந்தது. ரெய்டு நடந்த போது சுரேஷ் வீட்டில் யாரும் இல்லை. தகவல் அறிந்து அவர் குடும்பத்துடன் தலைமறைவாகி இருந்தார். 2 நாள் தேடுதலில் அவர் பாண்டிச்சேரிக்கு தப்பி சென்றது தெரிந்தது. அங்கு சென்ற தனிப்படை போலீசார் பட்டறை சுரேஷை குடும்பத்துடன் கைது செய்தனர். திருவெறும்பூர் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து முதல்கட்ட விசாரணை நடந்தது. பின் அவரது குடும்பத்தினர் விடுவிக்கப்பட்டனர்.