தீவிரம் குறையல... மோன்தா புயல் கரை கடந்த பிறகும் பக் பக் |cyclone montha | imd rain alert| andhra
கடந்த சில நாட்களாக வங்கக்கடலில் மிரட்டி வந்த தீவிர புயல் மோன்தா, ஆந்திராவின் மசூலிப்பட்டினம்-கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடந்தது. நேற்று இரவு முதல் நள்ளிரவு வரை புயலின் மையப்பகுதி கரையை கடந்தது. தீவிர புயலாகவே கரை கடந்ததால், மணிக்கு 100 முதல் 110 கிமீ வேகத்தில் பலத்த சூறை காற்று வீசியது. ஆந்திரா மற்றும் ஒடிசாவின் ஒரு பகுதியில் மிக கனமழை கொட்டித்தீர்த்தது. புயலின் தீவிரத்தை வானிலை மையம் ஏற்கனவே கணித்து இருந்ததால், பல இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. கடலோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு இருந்தனர். புயல் கரை கடந்த போது பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மின்கம்பங்கள் சரிந்தன. தீவிர புயலாக கரை கடந்த மோன்தா அதன் பிறகு புயலாக வலுக்குறைந்தது. அதிகாலை 5 மணி நிலவரப்படி புயலின் பின் பகுதி கரையை கடந்தது. தொடர்ந்து ஆந்திராவின் தரை பகுதிக்குள் மணிக்கு 10 கிமீ வேகத்தில் புயல் நகர்கிறது. அடுத்த 6 மணி நேரத்துக்கு புயலாகவே நீடிக்கும். பின்னர் ஆழ்ந்த காற்றழுத்து தாழ்வு மண்டலமாக வலுக்குறையும் என்று இந்திய வானிலை மையம் கூறி உள்ளது. ஆந்திரா, ஒடிசாவுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை தொடர்கிறது. தமிழகம் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.