உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டில்லியில் காற்று மாசை குறைக்க செயற்கை மழைக்கு ஏற்பாடு: ஐஐடி நிபுணர்கள் முயற்சி | Artificial Rain

டில்லியில் காற்று மாசை குறைக்க செயற்கை மழைக்கு ஏற்பாடு: ஐஐடி நிபுணர்கள் முயற்சி | Artificial Rain

டில்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசம் செயற்கை மழைக்கு ஏற்பாடு வட மாநிலங்களில் மழைக்காலம் முடிந்து பனிக்காலம் துவங்கியுள்ளது. டில்லியில் பனிப்பொழிவின் தாக்கம் தலைதுாக்கியுள்ளது. காற்றின் வேகம் குறைந்ததுடன், வாகனப் புகை, அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் பயிர் கழிவு, தொழிற்சாலை புகையால் கடந்த வாரம் காற்றின் தரம் மோசமடைந்தது. இந்நிலையில் தீபாவளியன்று வெளியான பட்டாசு புகையால், காற்றின் தரம் மிக மோசமான நிலைக்கு சென்றது. ஏக்யூஐ எனப்படும் காற்றின் தரக்குறியீடு பல இடங்களில் 500ஐ கடந்தது. தீபாவளி முடிந்து 2 நாட்களுக்குப் பின், காற்றின் வேகம் சற்று அதிகரித்ததால், சில இடங்களில் ஏக்யூஐ 300 என்ற அளவுக்கு குறைந்தது. இது சற்று ஆறுதல் அளித்தாலும், டில்லியின் முக்கிய பகுதிகளில் ஏக்யூஐ அளவு இன்னும் 300க்கு மேல் இருப்பதால், மக்கள் மூச்சுத் திணறலுக்கு ஆளாகியுள்ளனர். ஏற்கனவே, டில்லியில் பழைய டீசல் வாகனங்கள் இயங்க தடை, வெளிமாநில வாகனங்களுக்கு கட்டுப்பாடு, கட்டுமானப் பணிகளுக்கு தடை, பள்ளிகளை ஹைப்ரிட் முறையில் நடத்த வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சாவ்லா பகுதியில் ஏக்யூஐ 396 ஆக உள்ளது. சாந்தி சவுக், ஐஐடி, புராரி, புசா உள்ளிட்ட பகுதிகளில் 350 முதல் 375 என்ற வகையில் காற்றின் தரக்குறியீடு பதிவாகியுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், சிறுவர்கள், முதியோர் மட்டுமின்றி மத்திய வயதுடையவர்களும் சுவாசப் பிரச்னையை அனுபவிக்க நேரிடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனால், டில்லியில் மேக விதைப்பு செய்து, செயற்கை மழையை உருவாக்குவதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே கடந்த ஆண்டு இதே போன்ற ஒரு சூழல் ஏற்பட்ட போது, கான்பூர் ஐஐடி விஞ்ஞானிகளின் முயற்சியால், விமானம் மூலம் வானில் ரசாயனங்கள் துாவப்பட்டு, மழை மேகங்களை உருவாக்கி செயற்கை மழை பெய்விக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அப்போது, காற்றில் போதிய ஈரப்பதம் இல்லாததால், இம்முயற்சி பெரிய அளவில் பலன் அளிக்கவில்லை. இந்நிலையில், தற்போது காற்று மாசை கட்டுப்படுத்தவும், காற்றின் தரத்தை மேம்படுத்தவும், செயற்கை மழையை பெய்விக்கச் செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கான்பூர் ஐஐடி நிபுணர் குழு இதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. எனினும், காற்றின் ஈரப்பதம் சாதகமாக இருந்தால் மட்டுமே செயற்கை மழைக்கான நடவடிக்கையில் ஈடுபடுவது பலன் தரும் எனவும் அவர்கள் கூறினர். காற்றின் தரத்தை பொருத்து, இம்முயற்சி பலன் அளித்தால், இன்று இரவே டில்லியில் செயற்கை மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக அவர்கள் கூறினர்.

நவ 11, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ராஜா
நவ 11, 2026 21:00

டெல்லியில் வாரம் இரு நாள் லாக் டவுன் போடுவதற்கு முயற்சி செய்யலாம்.


பிரேம்ஜி
நவ 12, 2026 07:27

டில்லியை காலி செய்து விடலாம். அப்புறம் காற்று மாசு பற்றி கவலைப்படாமல் இருக்கலாம்!


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை