நடிகர் டெல்லி கணேஷ் மறைவு; திரைத்துறையினர் அஞ்சலி
நடிகர் டெல்லி கணேஷ் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 80. அவரது உடல் சென்னை, ராமாவரத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. தமிழ் திரைத்துறையை சேர்ந்த பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தூத்துக்குடியில் பிறந்த டெல்லி கணேஷ் திரைத்துரைக்கு வருவதற்கு முன்பு தக்ஷிண பாரத நாடக சபா என்ற டெல்லி நாடக குழுவில் நடித்து வந்தார். அதனாலேயே அவருக்கு டெல்லி கணேஷ் என பெயர் வந்தது. 1977ல் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த பட்டினப்பிரவேசம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதன்பின், 1980ல்களில் வெளிவந்த திரைப்படங்களில் தவிர்க்க முடியாத நடிகர் ஆக வலம் வந்தார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் கச்சிதமாக பொருந்தி நடிப்பை வெளிப்படுத்துவார். வில்லன், குணச்சித்திர காதாப்பாத்திரங்கள் மட்டுமல்ல காமெடியில் கலக்க கூடியவர். மிடில் கிளாஸ் மாதவன், அவ்வை சண்முகி, தெனாலி, மைக்கேல் மதன காமராஜன், ஆஹா உள்ளிட்ட படங்களை அவரது யதார்த்தமான நகைச்சவை நடிப்புக்கு உதாரணங்களாக சொல்லலாம். 1985-ல் சிந்து பைரவி படத்தில் குடிப்பழக்கத்துக்கு அடிமையான மிருதங்கக் கலைஞராக நடித்தது அவருக்கு பெரும் பெயரை பெற்று தந்தது. 1987-ல் வெளியான நாயகன் படத்தில் வேலு நாயக்கரின் இந்தி மொழி பெயர்ப்பாளராக நடித்துப் பாராட்டு பெற்றார். இயக்குநரும் நடிகருமான விசுவின் படங்களில் டெல்லி கணேஷுக்கு முக்கிய கதாப்பாத்திரங்கள் கொடுக்கப்பட்டன. கமல், ரஜினி படங்களிலும் நடித்து இருக்கிறார். 1990களில் வெளியான படங்களில் துணை நடிகர், நகைச்சுவை வேடங்களில் அதிகம் நடித்து இருந்தார். வித்தியாசமாக, சிதம்பர ரகசியம், அபூர்வ சகோதரர்கள் போன்ற படங்களில் வில்லனாகவும் நடித்து அசத்தினார். 2000-க்கு பின், தந்தை, தாத்தா போன்ற வயதான வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உட்பட 400க்கு மேற்பட்ட திரைப்படங்களில் டெல்லி கணேஷ் நடித்துள்ளார்.