கிளாம்பாக்கத்தில் மக்கள் வெள்ளம்: சொந்த ஊருக்கு படையெடுப்பு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர்களில் வசிக்கும் மக்கள் இன்று காலை முதலே சொந்த ஊர்களுக்கு செல்ல துவங்கினர். ஆயிரக்கணக்கானோர் கார்களில் ஊருக்கு புறப்பட்டதால் இன்று காலையில் பல மணிநேரத்துக்கு ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தாம்பரம் ரயில் நிலையத்திலும் கூட்டம் அலைமோதியது. தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ். ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ். திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களில் தென் மாவட்டங்களைச் சார்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் மகிழ்ச்சியுடன் ஊருக்கு கிளம்பினர். முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. எவ்வளவு கஷ்டப்பட்டாவது பரவாயில்லை: ஊர் போய் சேர்ந்து விட வேண்டும் என ஆண்களும் பெண்களும் ரயிலில் தொங்கியபடி பயணித்தனர். தீபாவளியை முன்னிட்டு, வழக்கத்துக்கு மாறாக தாம்பரம் ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியதால் ரயில்வே போலீசார் அதிகளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். தங்கள் ஊருக்கு செல்லும் பஸ் நிற்கும் இடத்தை நோக்கி கடைசிநேரத்தில் மக்கள் ஓட்டமும் நடையுமாய் செல்வதை பார்க்க முடிந்தது. கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று 2165 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாளை 1935 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. கிளாம்பாக்கம் செல்ல சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு இணைப்பு பஸ்களையும் மாநகர் போக்குவரத்துக்கழகம் இயக்கி வருகிறது. சென்னை மற்றும் புறநகர்களில் இருந்து 10 லட்சத்துக்கு அதிகமானவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. #DiwaliCelebrations #KilambakkamBusStand #EgmoreRailwayStation #TambaramRailwayStation #ChennaiDiwali #FestivalOfLights #ChennaiTravel #NativeJourney #Diwali2023 #ChennaiPeople #DiwaliVibes #TravelDiaries #ChennaiFestivals #PublicTransport #DiwaliInChennai #HomeForDiwali #FestiveSeason #ChennaiLife #DiwaliRush