தீபாவளியை ஒட்டி களைகட்டியது ஜவுளி, நகை வியாபாரம்: உள்நாட்டு வர்த்தகர்கள் உற்சாகம்
#DiwaliSale #IndianMarket #GoldSilverMarket #DeepawaliSales #CAIT #DelhiSales நம் நாட்டின் மிகப் பெரிய பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்று. ஆண்டுக்கு ஒரு முறை உற்சாகமாக கொண்டாடப்படும் இந்த பண்டிகையை ஒட்டி, ஜவுளி, நகை, வீட்டு உபயோக பொருட்கள், பட்டாசு, இனிப்பு வகைகள், மளிகை பொருட்கள் விற்பனை களை கட்டும். இந்த ஆண்டு, அனைத்து பொருட்களின் வர்த்தகமும் சேர்த்து, 6 லட்சம் ரூபாய்க்கு வியாபாரம் ஆகும் என, அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு நம்பிக்கை தெரிவித்தது. வட மாநிலங்களில் தன்தேராஸ், தீபாவளி, கோவர்தன் பூஜை, சகோதர உறவை கவுரவிக்கும் பாய் துாஜ் என, மொத்தம் 5 நாட்கள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதில் தன்தேராஸ் நாளில் நகை வியாபாரம் களைகட்டும். அக்ஷய திரிதியைக்கு நிகராக கொண்டாடப்படம் தன்தேராஸ் அன்று மட்டும், நாடு முழுதும் 1.25 லட்சம் கோடி ரூபாய்க்கு விற்பனையானதாக வியாபாரிகள் கூறினர். இதில் 66 ஆயிரம் கோடி ரூபாய்க்கு தங்கம், வெள்ளி நகைகள் விற்பனை நடந்துள்ளது. அதே போல், ரெடிமேட் ஆடைகள், வேட்டி, சேலை, சூட்டிங் ரகங்கள் என பல வகை ஜவுளிப் பொருட்கள், இனிப்பு வகைகள், தீபாவளி பண்டிகைக்கு தேவையான பூஜை பொருட்கள், பிரிட்ஜ், வாஷிங்மிஷின் என பர்னிச்சர் ஐட்டங்கள், வீட்டு அலங்கார பொருட்கள் என பலவகை பொருட்களின் விற்பனை களைகட்டியது. நாட்டு மக்களும், வியாபாரிகளும், உள்நாட்டு உற்பத்தி பொருட்கள் விற்பனையை ஊக்குவிக்க வேண்டும் என மத்திய அரசும் வலியுறுத்தியது. இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளி வர்த்தகம் எதிர்பார்த்ததை விட 1 லட்சம் கோடி ரூபாய் அதிகம் நடந்துள்ளதாக வர்த்தகர் கூட்டமைப்பினர் கூறினர். அதாவது, இந்த ஆண்டு விற்பனை 7 லட்சம் ரூபாயை கடந்துள்ளது. இதில் டில்லியில் மட்டும் தீபாவளி விற்பனை 1 லட்சம் கோடி ரூபாயை கடந்தது. இது முந்தைய ஆண்டுகள் விற்பனையை ஒப்பிடுகையில் அதிகம் எனவும், அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு கூறியுள்ளது. இம்முறை உள்நாட்டு உற்பத்தி பொருட்களுக்கு நல்ல வரவேற்பு இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. நவராத்திரி முதல் தீபாவளி வரையிலான காலகட்டத்தில் ஒட்டுமொத்த வர்த்தகம் 7 லட்சம் கோடி ரூபாயை தாண்டும் என ஏற்கனவே சிஏஐடி எனப்படும் அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.