திமுக நிறைவேற்றாத வாக்குறுதிகள் என்னென்ன? உடைத்து பேசிய மா.கம்யூ., |DMK | CPM|TNElection | Stalin
திமுக கடந்த சட்டசபை தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளில், நிறைவேற்றப்படாதவை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டில் பட்டியலிடப்பட்டது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், தமிழகத்துக்கான பொதுவான அறிவிப்புகள் மட்டுமின்றி தர்மபுரி மாவட்டத்துக்கென 44 வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டன. தற்போது, அடுத்த சட்டசபை தேர்தலுக்கு மூன்று மாதங்களே உள்ள நிலையில், பெரும்பாலானவை நிறைவேற்றப்படாமல் உள்ளன. தர்மபுரியில் இருந்து அரூர் வழியாக மொரப்பூருக்கு நான்கு வழிச்சாலை திட்டம் போன்ற ஒருசில வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன. அதேநேரத்தில், தர்மபுரியில் மரவள்ளிக்கிழங்கு கொள்முதல் நிலையம் மற்றும் நவீன மரவள்ளிக்கிழங்கு தொழிற்சாலை அமைக்கப்படும். செனாக்கல் நீர்ப்பாசன திட்டம், ஒகேனக்கல் உபரி நீரை மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களுக்கு நிரப்பி பாசன வசதி, செனாக்கல் தடுப்பணை, அரூரில் தொழிற்பேட்டை அமைக்கப்படும். தீர்த்தகிரீஸ்வரர் கோவில் சுற்றுலா தலமாக்கப்படும். பென்னாகரத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே பாலம், பாப்பாரப்பட்டி வேளாண் பயிற்சி பள்ளியை வேளாண் கல்லுாரியாக தரம் உயர்த்துதல், தர்மபுரியில் மாம்பழக்கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை, அனைத்து மலைக்கிராமங்களுக்கும் சாலை வசதி போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இந்நிலையில், திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பாக பென்னாகரம் மற்றும் அரூரில் மாநாடு நடந்தது.