தொகுதி பங்கீடு விஷயத்தில் 7 பொறுப்பாளர்கள் நியமனம் | 2026 Assembly election | DMK | Alliance parti
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், முதல் படியாக அதிமுக - பாஜ கூட்டணி உறுதி செய்யப்பட்டது. மற்ற கட்சிகளும் திரைமறைவாக கூட்டணி பேச்சுவார்த்தையில் இறங்கி உள்ளன. தேர்தல் பணியின் ஒரு பகுதியாக மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் 24 அணிகளின் நிர்வாகிகளிடம், திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை நடத்துவதாக அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. எந்தெந்த தொகுதிகளில் திமுக மீண்டும் வெற்றி பெறும் என்பது குறித்தும், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் வெற்றி வாய்ப்பு குறித்தும், அந்த கூட்டங்களில் அலசப்படுகிறது. கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்ற எண்ணிக்கை அடிப்படையில், 2026 சட்டசபை தேர்தலுக்கு தொகுதிகள் ஒதுக்கினால் போதும். ஆளுங்கட்சியாக இருப்பதால், 200 தொகுதிகளில் போட்டியிட்டு, திமுகவால் வெற்றி பெற முடியும் என பெரும்பான்மை நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 2021 சட்டசபை தேர்தலில், திமுக 174 தொகுதிகளில் போட்டியிட்டு, 125ல் வெற்றி பெற்றது. காங்கிரசுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கியும், 18ல் தான் வெற்றி பெற்றது. இப்போது ஆளும் கட்சியாக இருப்பதால், 200ல் போட்டியிட்டால் தான் 150 தொகுதிகளை கைப்பற்ற முடியும் எனவும் திமுக நினைக்கிறது. கடந்த சட்டசபை தேர்தலில், கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்ற அதே எண்ணிக்கை தொகுதிகளை மட்டும், இந்த முறை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கவும் ஆலோசிக்கிறது. புதிய வரவான கமல் உட்பட கூட்டணி கட்சிகளுக்கு 34 தொகுதிகள் மட்டும் ஒதுக்கும் வகையில் தொகுதி பங்கீட்டை அமைத்து கொள்ளவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இப்படியொரு தொகுதி பங்கீட்டைகூட்டணி கட்சியினர் எப்படி ஏற்றுக் கொள்வர் என்பது குறித்தும் ஆலோசனை நடக்கிறது.