தேமுதிகவை கூட்டணிக்குள் இழுத்த திமுக... பரபரப்பு தகவல் |dmk dmdk alliance| tn election 2026| admk
சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தவெக சேரக்கூடும் வாய்ப்பு இருப்பதால், தங்கள் கூட்டணியை மேலும் பலப்படுத்த வேண்டும் என்று திமுக தீவிரம் காட்டி வருகிறது. ராமதாஸ் தலைமையிலான பாமக மற்றும் தேமுதிகவை கூட்டணிக்குள் இழுக்க திரைமறைவில் பேச்சு நடக்கிறது. அதிமுக மீது ஏற்கனவே தேமுதிக அதிருப்தியில் உள்ளது. அதாவது, கடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில், தே.மு.தி.க.,வுக்கு 5 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் என உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் ராஜ்யசபா தேர்தலில் தே.மு.தி.க.,வுக்கு அ.தி.மு.க., வாய்ப்பளிக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த தே.மு.தி.க, அதிமுக கூட்டணியில் தொடர விரும்பவில்லை. தொடர் தோல்வியை சந்திக்கும் அதிமுக கூட்டணியை விட்டு விலகி, வெற்றி கூட்டணியில் சேர வேண்டும்; கட்சிக்கு அங்கீகாரம் பெற வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விரும்புகிறார். இந்த சந்தர்ப்பத்தை திமுக கச்சிதமாக பயன்படுத்திக்கொண்டது. தேமுதிகவுடன் நடத்திய ரகசிய பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது பற்றி தேமுதிக வட்டாரம் கூறியது: கடந்த 2011 சட்டசபை தேர்தலுக்கு பின் தேமுதிக எதிலும் வெற்றி பெறவில்லை. வரும் சட்டசபை தேர்தலில், வாழ்வா, சாவா என்ற நிலை, தேமுதிகவுக்கு ஏற்பட்டுள்ளது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில், வெற்றி வாய்ப்பை அளிக்கக்கூடிய சில ஆயிரம் ஓட்டுகள் இருப்பதால், அக்கட்சியை கூட்டணியில் சேர்ப்பதற்கு திமுக தலைமை விரும்புகிறது. திமுகவிடம் இரட்டை இலக்கத்தில் சீட்டுகளைப் பெற தேமுதிக தரப்பில் பேச்சு நடத்தப்பட்டது. ஆனால் தேமுதிக வெற்றி பெறக்கூடிய எட்டு தொகுதிகளை ஒதுக்கி கொடுக்க திமுக தயாராகி உள்ளது என்று அந்த வட்டாரம் கூறியது.