கோல்டன் ரெட்ரீவர் நாய் போட்டோவுடன் இருப்பிட சான்றிதழ் | dog residence certificate
பீகாரில் இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நாடு முழுவதும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. மொத்தம் உள்ள 7.9 கோடி வாக்காளர்களில் 65.2 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இறப்பு, இடம்பெயர்ந்தவர்கள், இரு இடங்களில் பதிவு இதற்கு முக்கிய காரணமாகும். மேலும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்கு சமர்ப்பிக்கப்படும் அடையாள ஆவணங்கள் கடுமையாக சேதிக்கப்படுகின்றன. இது காரணத்தோடு தான் நடக்கிறது என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அங்கே போலி அடையாள அட்டைகள் பெருமளவில் புழங்குவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனை உறுதிபடுத்தும் விதமாக நாய்க்கு இருப்பிட சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. பாட்னாவிற்கு அருகிலுள்ள மசௌரி என்ற நகரத்தில் இருந்து விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் நாய்க்கு இருப்பிட சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. ஜூலை 24ம் தேதி மாலை 3.56 மணிக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறது. இருப்பினும், இரண்டே நிமிடங்களில், அதாவது 3.58 மணிக்கு இது கண்டறியப்பட்டு ரத்து செய்யப்பட்டது. இதில் தொடர்புடையவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர். நாயின் இருப்பிட சான்றிதழில் தந்தையின் பெயர் குட்டா பாபு என்றும், தாயின் பெயர் குட்டியா தேவி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சான்றிதழ் பெற்ற நாயின் பெயர் டாக் பாபு என குறிப்பிடப்பட்டு கோல்டன் ரெட்ரீவர் நாயின் புகைப்படமும் இடம்பெற்றிருக்கிறது. முகவரில், கவுலிச்சக், வார்டு எண்: 15 மசவுரி தபால் நிலைய பகுதியில் வசிப்பதாகவும் இருக்கிறது. வருவாய் அதிகாரி முராரி சவுகான் என்பவர் டிஜிட்டல் முறையில் கையெழுத்திட்டு அந்த சான்றிதழ் வழங்கியுள்ளார். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.