நிலச்சரிவில் இருந்து 63 உயிரை நாய் காப்பாற்றியது எப்படி?ருசிகர தகவல் Dog Rocky saved 63 lives land
இமாசலப்பிரதேசம் இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ளதால் அம்மாநிலம் முழுவதும் மலையும் மலை சார்ந்த பகுதிகளாகவுமே காணப்படுகிறது. அங்கு பலத்த மழை பெய்து வருகிறது. பலத்த மழை பெய்யும்போது பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு இதுவரை 100 பேர் இறந்திருப்பது இமாச்சல் மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால், ஒரு கிராமத்தில் நடந்த சம்பவம் சோகத்திலும் கொஞ்சம் மனநிறைவை அளிப்பதாக உள்ளது. மண்டி மாவட்டத்தில் பலத்த மழை கனமழை பெய்தது. சியாதி Siyathi என்ற சிறு மலை கிராமத்தில் நள்ளிரவு 1:00 மணிக்கு மக்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு வீட்டின் தரை தளத்தில் சுற்றி திரிந்த ராக்கி என்ற நாய் வழக்கத்துக்கு மாறாக தொடர்ந்து குரைத்து கொண்டிருந்தது. வீட்டு ஓனர் லலித் குமார் கண்விழித்தார். லலித்குமார் வீடு மற்ற வீடுகளை விட சற்று உயரமான இடத்தில் இருக்கிறது. அவர் 2வது மாடியில் இருந்தார். அங்கிருந்து பார்த்தால் சுற்று வட்டாரம் முழுவதையும் நன்றாக பார்க்க முடியும். ஏன் இப்படி நாய் தொடர்ந்து குரைக்கிறது என யோசித்தபடியே வெளியே வந்து பார்த்தார். தனது வீட்டின் காம்பவுண்ட் சுவரில் பெரிய விரிசல் ஏற்பட்டிருந்தது. அதன்மூலம் வீட்டிற்குள் தண்ணீர் வேகமாக வருவதை கண்டார். ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதையும், அருகிலுள்ள நீரோடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதையும் கண்டார். பலத்த மழை விடாமல் கொட்டிக் கொண்டிருக்கிறது. வெள்ளம் வரும் வேகத்தை பார்த்தால் அடுத்து தங்கள் பகுதியிலும் நிச்சயம் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என லலித் குமாரின் ஆழ் மனது சொன்னது. லலித் குமார் பதற்றத்துடன் இரண்டாவது மாடியிலிருந்து கீழே இறங்கி ஓடி வந்தார். நாயைத் தூக்கிக்கொண்டு, அக்கம் பக்கத்து வீடுகளுக்கு ஓடிப்போய் விஷயத்தை சொன்னார். வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நிலச்சரிவு ஏற்படப்போகிறது. சீக்கிரம் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடுங்கள் என எச்சரித்தார். அந்த இடத்தில் 22 வீடுகள் இருந்தன. வீட்டில் இருந்த எல்லாரும் அலறியடித்துக் கொண்டு பாதுகாப்பான பகுதியை நோக்கி ஓடினர். அடுத்த சில நிமிடங்களில் வெள்ளம் கரை புரண்டு ஓடி, அந்த இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. ஆறேழு வீடுகள் புதைந்து போனது.. 12 வீடுகள் இடிந்து விழுந்தன. மற்ற வீடுகள் கடுமையாக சேதமடைந்தன. வீட்டிலிருந்து தப்பி ஓடிய கிராமத்தினர் சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள நைனா தேவி கோயிலில் தஞ்சம் புகுந்தனர். இந்த சம்பவம் கடந்த ஜூன் 26ம் தேதி நடந்தது. ஒரு வாரத்துக்கு மேல் 22 குடும்பங்களை சேர்ந்த 63 பேர் அந்த கோயிலில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகளை அரசும் அக்கம் பக்கத்து கிராமங்களை சேர்ந்தவர்களும் செய்து கொடுக்கின்றனர். ராக்கி சரியான நேரத்தில் குரைத்து ஓனரை எழுப்பி விட்டதால் 63 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். நாய்க்கும் ஓனர் லலித்துக்கும் ஊர் மக்கள் நன்றி கூறினர். ராக்கியின் வயது ஐந்து மாதம்தான். சுமார் 3 மாதங்களுக்கு முன்பு மண்டியில் உள்ள எனது சகோதரர் வீட்டில் இருந்து அதை வாங்கி வந்தேன் நாங்கள் உயிரோடு இருக்க அதுதான் காரணம் என ஓனர் லலித் நெ கிழ்ச்சியுடன் கூறினார். அதிர்ஷ்டமும், அலர்ட்டாக இருந்த நாயும்தான் 62 உயிரை காப்பாற்றியிருக்கிறது என பஞ்சாயத்து தலைவர் தேஸ்ராஜ் கூறினார். 63 பேரை காப்பாற்றிய நாயின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. பலரும் நாயை இமாச்சல் ஹீரோ என பாராட்டி பதிவிடுகின்றனர். தங்கள் எஜமானர்களுக்கு நாய்கள் எவ்வளவு விசுவாசமாக இருக்கின்றன என்பதை உணர்த்தும்விதமாக இந்த சம்பவம் நடந்திருக்கிறது.