'டபுள் டெக்கர் கார்கோ' ரயில் தயாரிப்பில் மும்முரம்
பயணிகள் மற்றும் சரக்குகளை ஒரே நேரத்தில் ஏற்றி செல்லும் வகையில் டபுள் டெக்கர் ரயில்களை அறிமுகம் செய்ய இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்காக சில ரயில் பெட்டிகளை தயார் செய்து சோதனை ஓட்டம் பார்க்க ரயில்வே தயாராகி வருகிறது. ஒரு பெட்டி தயாரிக்க 5 கோடி ரூபாய் செலவாகும். இது, 16 முதல் 20 பெட்டிகள் கொண்ட ரயிலாக இருக்கும். டபுள் டெக்கர் கார்கோ ரயிலின் முதல் அடுக்கில் 6 டன் வரை எடையுள்ள சரக்குகள் ஏற்றலாம். மேல் அடுக்கில் ஒரு பெட்டிக்கு 46 பயணிகள் உட்கார வசதி இருக்கும். ஒரு பெட்டி உணவகமாக இருக்கும். இதன் மூலம் சரக்குகளுக்கு என தனி ரயில் தேவைப்படுவது குறையும். இது தவிர வந்தே கார்கோ என்ற பெயரில் பிரத்யேகமாக சரக்கு போக்குவரத்துக்கு என அதிக சரக்குகளை சுமந்து, அதிவேகமாக செல்லக்கூடிய ரயில் பெட்டிகளும் தயாரிக்கப்பட உள்ளன. இது மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இந்த ரயில் பெட்டிகள் கபுர்தலாவல் உள்ள தொழிற்சாலையில் டிசைன் செய்யப்பட்டு உள்ளன. விரைவில் தயாரிப்பு தொடங்கப்பட உள்ளன.