துரைமுருகனுக்கு எதிரான 2 சொத்து குவிப்பு வழக்குகள் மீண்டும் விசாரணை! Durai Murugan Case | DMK Minis
2006 - 11 திமுக ஆட்சிக்காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 40 லட்சம் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிந்தது. துரைமுருகன் மற்றும் அவரது மனைவிக்கு எதிரான இந்த வழக்கிலிருந்து இருவரையும் விடுவித்து வேலூர் சிறப்பு கோர்ட் 2017ல் உத்தரவிட்டிருந்தது. உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை ஐகோர்ட்டில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்தது. நீதிபதி வேல்முருகன் விசாரித்தார். இன்றைய விசாரணையின் போது அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவி தரப்பில், சொத்துக்கள் வருமான வரிக்கணக்கில் காட்டப்பட்டுள்ளன. வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்துக்கள், வழக்கு காலகட்டத்துக்கு முன் வாங்கப்பட்டவை. துரைமுருகன் மனைவிக்கு தனிப்பட்ட வருவாய் ஆதாரங்கள் இருந்தும், அவரை இல்லத்தரசி என கூறி அவருக்கு தனிப்பட்ட வருவாய் ஆதாரங்கள் இல்லை என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆவண ஆதாரங்களை சுட்டிக்காட்டி, இருவரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். ஆதாரங்களின் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை எதிர்த்த மறு ஆய்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் வாதிடப்பட்டது. இந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதி, வேலூர் சிறப்பு கோர்ட் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து ஆறு மாதங்களுக்குள் விசாரணை முடிக்க வேண்டும் என்றும் வேலூர் சிறப்பு கோர்ட்டுக்கு நீதிபதி உத்தரவிட்டார். ஏற்கனவே நேற்று 3.92 கோடி சொத்து குவிப்பு வழக்கில் துரைமுருகன் அவரது குடும்பத்தினரை விடுவித்ததை கோர்ட் ரத்து செய்து இருந்தது. அடுத்தடுத்து சொத்து குவிப்பு வழக்குகளில் மீண்டும் விசாரணை துவங்குவது துரைமுருகனுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது