எம்பி வீட்டின் மின் மீட்டரில் தில்லுமுல்லு செய்தது அம்பலம்
உத்தர பிரதேசம், சம்பல் தொகுதி எம்பி ஜியா உர் ரஹ்மான். அகிலேஷின் சமாஜ்வாடி கட்சியை சேர்ந்தவர். தீப சராய் பகுதியில் உள்ள இவரது வீட்டுக்கு 2 தினங்களுக்கு முன் மின்வாரிய ஊழியர்கள் ரீடிங் எடுக்க சென்றனர். ஏசி, பிரிட்ஜ் போன்றவற்றுக்கான மின்சார பயன்பாடு மீட்டரில் பதிவு ஆகாதபடி செய்து மின்திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது பற்றி போலீசில் புகார் அளித்தனர். மின்வாரிய ஊழியர்களை பணிசெய்ய விடாமல் தடுத்ததாக எம்பி ஜியாவின் தந்தை மீதும் வழக்குப்பதியப்பட்டது. மின்சார திருட்டுக்காக ஜியா உர் ரஹ்மான் எம்பிக்கு மாநில மின்வாரியம் 1.91 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. அவரது வீட்டு மின் இணைப்பையும் துண்டித்தது. இது பற்றி மின்வாரிய உதவி பொறியாளர் வினோத் குமார் கூறும்போது, எம்பி ஜியாவின் வீட்டில் 4 கிலோ வாட் திறனுடைய மீட்டர் பொருத்தப்பட்டு இருந்தது. அந்த மீட்டர் கடந்த ஆறு மாதங்களாக பூஜ்யம் யூனிட் அளவீட்டை காட்டியது. ஸ்மார்ட் மீட்டரை பொருத்தி சோதனை செய்தபோது 16 கிலோவாட் திறன் பயன்படுத்துவது தெரிந்தது. அதனடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்டது என்றார். இந்த குற்றச்சாட்டை மறுத்த எம்பியின் வக்கீல் ஜமால், வீட்டில் 10 கிலோவாட் சோலார் பேனல் உள்ளது. அதைத்தான் வீட்டில் பயன்படுத்துகிறார்கள் அதனால்தான் மீட்டர் பூஜ்ய அளவீட்டை காட்டுகிறது என்றார்.