13 இடங்களில் ED ரெய்டு: ஆம் ஆத்மி தலைவர்களுக்கு சிக்கல்
டில்லியில் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி நடந்த போது 2018 -19ம் ஆண்டில் 5 ஆயிரத்து 590 கோடி ரூபாய் மதிப்பில் 24 மருத்துவமனைகள் கட்டுவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. இதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த பாஜவை சேர்ந்த விஜேந்தர் குப்தா டில்லி போலீசின் ஊழல் தடுப்பு பிரிவில் புகார் அளித்தார். டில்லியில் தேர்தல் நடந்து முதல்வர் ரேகா குப்தா தலைமையில் பாரதிய ஜனதா அரசு அமைந்த பிறகு, இந்த புகார் குறித்து ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரித்து ஆம் ஆத்மி ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த சவுரவ் பரத்வாஜ் மற்றும் சத்யேந்தர் ஜெயின் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இவ் வழக்கின் அடிப்படையில் அமலாக்க துறை அதிகாரிகள் சட்ட விரோத பண பரிமாற்றங்கள் நடந்திருக்கிறதா? என விசாரித்து வந்தனர். அதன் தொடர்ச்சியாக இன்று காலை அமலாக்க துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் முன்னாள் அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் வீடு மற்றும் முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர். மொத்தம் 13 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனைகள் மத்தியஅரசின் பழிவாங்கும் நடவடிக்கை என ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.