உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எடப்பாடி பிரசாரத்தில் மர்ம கும்பல்: கோவையில் பரபரப்பு: போலீஸ் அட்வைஸ் Edappadi palanisami campai

எடப்பாடி பிரசாரத்தில் மர்ம கும்பல்: கோவையில் பரபரப்பு: போலீஸ் அட்வைஸ் Edappadi palanisami campai

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு தேர்தல் பிரசாரத்தை துவங்கினார். மேட்டுப்பாளையத்தில் உள்ள திருமண மண்டபத்தில் விவசாயிகளிடம் குறைகேட்டார். இரண்டு இடங்களிலும் அதிமுகவினர் திரண்டு வந்ததால், கூட்டம் அலைமோதியது. பல நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை நெருங்கிச் சென்று பார்க்க முயன்றனர். இந்த சந்தர்ப்பத்தைபயன்படுத்தி மர்ம ஆசாமிகள், சில அதிமுக நிர்வாகிகளின் பேன்ட் பாக்கெட்டை கிழித்து பணத்தை பிக்பாக்கெட் அடித்தனர். மேட்டுப்பாளையம் கோயிலில் அம்மையப்பன் மகாலுக்கு எடப்பாடி சென்றபோது, அங்கு வந்திருந்த காரமடை ஒன்றிய அ.தி.மு.க பொருளாளர் தங்கராஜ் பேண்ட்டை கிழித்து 50 ஆயிரம் ரூபாயை மர்ம ஆசாமிகள் திருடியிருந்தனர். மேலும் 5 அதிமுகவினரும் பிக்பாக்கெட் பேர்வழிகளிடம் பணத்தை பறிகொடுத்தனர். மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகி செல்வராஜ் 7000 ரூபாயை பறிகொடுத்தார். தங்கராஜ் நண்பர் ஆனந்தனிடம் 40 ஆயிரம் ரூபாயையும், சரவணகுமாரிடம் 5 ஆயிரம் ரூபாயையும், சுரேஷிடம் 10 ஆயிரம் ரூபாயையும் வீரபத்திரனிடம் 15 ஆயிரம் ரூபாயையும் திருட்டு ஆசாமிகள் பிக்பாக்கெட் அடித்திருந்தனர். பணத்தை காணவில்லை ஒவ்வொரு அதிமுக நிர்வாகியாக வரிசயைாக சொன்னதும் எடப்பாடி பழனிசாமி பிரசார நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. எல்லார் பேண்ட் பாக்கெட்டையும் பிளேடால் கிழித்து பிக்பாக்கெட் அடித்திருந்தனர். எடப்பாடி பழனிசாமி மேட்டுப்பாளையத்தில் பிரசாரத்தை முடித்து விட்டு கிளம்பியதும் தங்கராஜ், அவரது நண்பர் ஆனந்தன் மற்றும் அதிமுகவினர் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் கிழிந்த பேன்ட்டுடன் சென்று புகார் கொடுத்தனர். அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையை துவங்கினர். கூட்டம் அதிகமாக இருந்ததால் சிசிடிவி கேமராவில் பிக்பாக்கெட் அடிப்பது தெளிவாக பதிவாகவில்லை. அதிமுகவினர் ட்ரோன் கேமரா மூலம் பிரசார வீடியோ எடுத்திருந்தனர். ட்ரோன் கேமரா மேலே இருந்து ஒரு திருடனை அழகாக படம் பிடித்திருந்தது. தங்கராஜின் பேன்ட் பாக்கெட்டை கிழித்து பர்சை ஆசாமி திருடிச் செல்வதை கேமரா தெளிவாக படம்பிடித்திருந்தது. அந்த ஆசாமியை போலீசார் பிடித்து விசாரித்தபோது அதிர்ச்சி தகவல் வெளிவந்தது. மொத்தம் 6 பேர் கும்பலாக பிக்பாக்கெட் அடிக்க திட்டம்போட்டு வந்திருந்தது தெரிய வந்தது. அவனிடம் நடத்திய விசாரணையில், எஞ்சிய ஐந்து பேரும் கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் நிற்பது தெரிய வந்தது. கோவை போலீசார் அந்த பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். திருட்டு ஆசாமிகள், சென்னை திருவேற்காட்டை சேர்ந்த ராஜு, கோவையைச் சேர்ந்த ராஜா என்ற குண்டு ராஜா, ஆந்திர மாநிலம் புத்தூரை சேர்ந்த சுரேஷ், ரமேஷ், தர்மபுரியை சேர்ந்த கோபால், திருச்சியை சேர்ந்த அருள் குமார் என்பது தெரிய வந்தது. எடப்பாடி பழனிசாமி பிரசார திட்டம் வகுத்தபோதே, பிரசாரத்துக்கு வரும் அதிமுகவினரிடம் கைவரிசை காட்ட இந்த கும்பல் திட்டம் திட்டியிருக்கிறது. திருப்பதியைச் சேர்ந்த சுரேஷ், ரமேஷ் தர்மபுரியை சேர்ந்த கோபால் ஆகியோர் பிளேடு போடுவதில் கைதேர்ந்தவர்கள். பிரசார நிகழ்ச்சியில் 6 பேரும் தள்ளி தள்ளி நின்று கொள்வார்கள். சுரேஷ், ரமேஷ், கோபால் பிளேடு போட்டு பர்சை அடித்ததும் அதை உடனே மற்றவர்களிடம் பாஸ் செய்து விடுவர். இப்படித்தான் மேட்டுப்பாளையத்தில் கோயில், திருமண மண்டபம் இரண்டு இடங்களிலும் 6 அதிமுகவினரிடம் திருட்டு பேர்வழிகள் பர்சை பிக்பாக்கெட் அடித்துள்ளனர் என தெரிய வந்தது. நேற்றுமுன்தினம் இரவு கோவை டவுன்ஹால் பகுதியில் எடப்பாடி பழனிசாமி பேசியபோது அங்கு நான்கு ஆயிரத்துக்கும் அதிகமான அதிமுகவினர் திரண்டிருந்தனர். அப்போது, அதிமுக நிர்வாகி வெங்கடேஷ் என்பவரின் பாக்கெட்டியில் இருந்த பர்ஸ் பிக் பாக்கெட் அடிக்கப்பட்டது. பர்சில் 7000 ரூபாய், 3 ஏ.டி.எம்., கார்டுகள், ஆதார் கார்டு, டிரைவிங் லைசன்ஸ், பான் கார்டு உள்ளிட்டவை இருந்தது என போலீசில் அவர் புகார் அளித்தார். உக்கடம் போலீசார் சந்தேகத்துக்கிடமான ஒரு ஆசாமியை பிடித்து விசாரித்து வருகின்றனர். ஆனால் அவன் பெயர் விவரத்தை வெளியிடவில்லை. எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் பர்ஸ், நகை திருடும் திட்டத்துடன் கிட்டத்தட்ட 50 பேர் கொண்ட கும்பல் களமிறங்கியுள்ளதாக தெரிய வந்திருக்கிறது. ஆந்திராவைச் சேர்ந்த கைதேர்ந்த திருட்டு ஆசாமிகளும் வந்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த கும்பலை கூண்டோடு பிடிக்கத்தான் தீவிரமாக விசாரித்து வருகிறோம் என, கோவை போலீசார் கூறினர். பிரசாரத்துக்கு வரும் அதிமுகவினர், குறிப்பாக பெண்கள் உஷாராக இருக்கும்படி போலீசார் அறிவுறுத்திஉள்ளனர். மேட்டுப்பாளையத்தில் கைவரிசை காட்டி ஆறு பேரையும் போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

ஜூலை 09, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

SENTHIL NATHAN
ஜூலை 28, 2025 14:43

கூட்டி கழிச்சு பார்தா கணக்கு சரியாக இருக்கும்


subramanian
ஜூலை 10, 2025 13:52

திமுகவின் அராஜகம் ஒழிக


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை