ஜாதி பேரணி, கூட்டங்கள் உட்பட அனைத்தும் தடை: யோகியின் அதிரடி | Yogi Adityanath | Caste-based rallies
உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அங்கே கிரிமினல் குற்றங்களுக்கு எதிராக யோகி ஆதித்ய நாத் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வரிசையில், ஜாதி அடிப்படையிலான அரசியல் பேரணிகள், பொதுக் கூட்டங்களுக்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அனைத்து கலெக்டர்கள், செயலர்கள், போலீஸ் துறை தலைவர்கள் ஆகியோருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், 10 முக்கியமான அம்சங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, ஜாதி பாகுபாடுகளை களைய வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் அழுத்தமாக வலியுறுத்தப்பட்டுள்ளது. வாகனங்களில் ஜாதி பெயர்கள், வாசகங்கள் அல்லது ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தால், 1988 மோட்டார் வாகன சட்டத்தின்படி அபராதம் விதிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது .பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் தொடர்புடைய வழக்குகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப் பட்டுள்ளது. உத்தரப்பிரதேச அரசின் இந்த உத்தரவு, அரசியல் கட்சிகளை அதிர வைத்திருக்கிறது. குறிப்பாக 2027ல் சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில், அரசின் இந்த உத்தரவு, ஜாதி அடிப்படையில் மக்களை அணுகுவதற்கு முட்டுக்கட்டை போடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தேர்தல் பிரசாரங்களின் போது ஆளும் பா.ஜ., கூட தடுமாறக் கூடும் என கூறப்படுகிறது.