ஈரோடு சத்தி அருகே விடிய விடிய பரபரப்பு: அதிர்ச்சி சம்பவம் | Erode | Sathyamangalam | Accident
பெட்ரோல் பரவி விஷமான கிணறு! அதிகாலை வரை நடந்த மீட்பு பணி மீட்க சென்றவர்களும் அலறல் ஈரோடு சத்தியமங்கலம் அருகே முள்ளிக்காபாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார். மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தோட்டத்து வீட்டில் வசித்து வந்தார். வியாழனன்று மாலை 6 மணிக்கு வெளியே செல்ல காரை ஸ்டார்ட் செய்துள்ளார். ரிவர்ஸ் எடுத்த போது கார் வீட்டு தடுப்பு சுவரை உடைத்து கிணற்றில் விழுந்தது. அப்போது 80 அடி ஆழமுள்ள கிணற்றில் 40 அடிக்கும் மேல் தண்ணீர் இருந்தது. கார் முழுவதுமாக உள்ளே மூழ்கியது. சத்தம் கேட்டு குடும்பத்தினர் ஓடி வந்தனர். தண்ணீரில் மூழ்கியதில் கார் கதவு லாக் ஆனதால் சிவக்குமார் வெளியேற முடியவில்லை. காருக்குள்ளேயே மூச்சு திணறி இறந்தார். சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் சொல்லப்பட்டது. தீயணைப்பு துறையினர் சிவகுமாரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். காரில் இருந்த பெட்ரோல், ஆயில் கிணற்று நீரில் பரவியதால் மீட்பு பணி தாமதமானது. இரவு 11 மணிக்கு மேலாகியும் சிவக்குமார் உடலை மீட்க முடியவில்லை. தொடர்ந்து மோட்டார் மூலம் கிணற்று நீரை வெளியேற்றும் பணி நடந்தது. பாதியளவு தண்ணீர் வெளியேற்றப்பட்ட பிறகு நான்கு மீனவர்கள் கிணற்றுக்குள் இறங்கி சிவக்குமார் உடலை எடுக்க உள்நீச்சல் அடித்தனர். தண்ணீரில் பெட்ரோல் மற்றும் ஆயில் கலந்து நச்சுத்தன்மையாக மாறியதால் மீட்க சென்ற மீனவர் ஒருவர் மூச்சு திணறி இறந்தார் எஞ்சிய மூன்று மீனவர்கள் தப்பித்து வெளியே வந்து விட்டனர். விடிய விடிய நடந்த மீட்பு பணியில் அதிகாலை 3.30க்கு கிணற்று நீர் முழுவதும் வெளியேற்றப்பட்ட பிறகு, கிரேன் மூலம் கார் மீட்கப்பட்டது. காரில் இருந்த சிவக்குமார், அவரை காப்பாற்றச் சென்று இறந்த மீனவர் மூர்த்தி உடல் வெளியே எடுத்து வரப்பட்டது. காருடன் கிணற்றுக்குள் பாய்ந்து இறந்து போன விவசாயி, அவரை மீட்க சென்ற மீனவரும் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.