அதிமுக முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் திடீர் மரணம் | Ex MLA Gunasekaran | ADMK | Passes away | Tirupur |
திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் உடல்நல குறைவால் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 58. அதிமுகவின் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளராக பதவி வகித்து வந்தார். நுரையீரல், கணையத்தில் ஏற்பட்ட தொற்று காரணமாக கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் இன்று காலை இறந்தார். மறைந்த குணசேகரனுக்கு ஒரு மகளும் மகனும் இருக்கின்றனர். 2001 முதல் 2006 வரை திருப்பூர் நகராட்சி கவுன்சிலராக இருந்த குணசேகரன், 2011 முதல் 2016 வரை திருப்பூர் மாநகராட்சி துணை மேயராக பதவி வகித்தார். 2016 சட்டசபை தேர்தலில் திருப்பூர் தெற்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2021 வரை 5 ஆண்டுகள் அதிமுக எம்எல்ஏவாக பணியாற்றினார். குணசேகரன் மறைவு அதிமுகவினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவினர் மட்டுமின்றி பல்வேறு கட்சியினரும் குணசேகரன் மறைவுக்கு இறங்கல் தெரிவித்துள்ளனர். அவரது உடல் இன்று மதியம் திருப்பூர் ராக்கியபாளையத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்படுகிறது.