ஆந்திராவில் கள்ளநோட்டு கும்பல் அட்டகாசம்! Fake Currency captured in Andhra | Attack on Andhra Police
ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் ஜி.சிகடத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். பைக்கில் வந்த ரவி, ராஜேஷ் ஆகியோரின் பைகளை சோதனையிட்டதில், 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் சிக்கின. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்து விசாரித்தனர். மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த பிரபாகர், ராஜமுந்திரியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்டது விசாரணையில் தெரிந்தது. பீமாவரத்தில் பதுங்கியிருந்த பிரபாகரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணமூர்த்தி தலைமறைவானதை அடுத்து, பிரபாகரை போலீஸ் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு பீமாவரத்தில் இருந்து ஸ்ரீகாகுளம் நோக்கி போலீசார் புறப்பட்டனர். பிரபாகர் கள்ள நோட்டு கும்பல் தலைவனாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. ராஜமுந்திரியை கடந்த போது, 25 பேர் கொண்ட கும்பல் வாகனத்தை மறித்து போலீசாரை தாக்கியது. 4 கான்ஸ்டபிள் மற்றும் சப் இன்ஸ்பெக்டரை தாக்கி, பிரபாகரை தங்களுடன் அழைத்து சென்றனர். தப்பி ஓடிய கும்பல், போலீசார் தங்களை பின் தொடராமல் இருக்க, ஜீப்பின் சாவியையும் எடுத்து சென்றனர். காயமடைந்த போலீசார், கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீஸ் படையினர், காயமடைந்த போலீசாரை அழைத்து சென்றனர். தப்பியோடிய கும்பல், பிரபாகர் மற்றும் தலைமறைவாக உள்ள கிருஷ்ணமூர்த்தி குறித்து தனிப்படை அமைத்து விசாரிக்கின்றனர். போலீசாரை தாக்கி, கள்ள நோட்டு கும்பல் தலைவன் தப்பிச் சென்ற சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.