சென்னை ராஜன் கண் மருத்துவமனையின் அற்புத முயற்சி | Eye Donation | Rajan Eye Care Hospital
கண் பார்வை இழப்பு என்பது இந்தியாவில் அதிகம். சுமார் ஒன்றரை கோடி பேர் பார்வை குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 60 சதவிகிதம் பேர் 12 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள். பார்வை இழந்தவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைக்க கண்தானம் பெரிதும் உதவுகிறது. இறந்தவரின் கண்களை அப்படியே மற்றவர்களுக்கு பொருத்தமாட்டார்கள். கண்ணிலுள்ள கார்னியா என்ற கருவிழியை மட்டும் எடுத்து பார்வையிழந்தவருக்கு பொருத்துவார்கள். கண்களை எடுத்தபின் இமைகளை மூடி தைத்து விடுவதால், முகம் விகாரமாக தோன்றாது. ஒருவர் இறந்த பிறகு எவ்வித பலனும் இல்லாமல் போகக்கூடிய கண்கள் தானமாக கொடுக்கப்பட்டால் அவரின் கண்கள் மூலம் மற்றவர்கள் வாழ்வார்கள். இதனால் கண்தானம் பற்றிய விழிப்புணர்வை ஒவ்வொருவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டிய தேவை உள்ளது. தேசிய கண்தான வார விழா ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு செப்டம்பர் 3ம் தேதி சென்னை ரோட்டரி ராஜன் கண் வங்கி சார்பில் வினாடி வினா போட்டி ராஜன் கண் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி மாணவர்கள் பங்கேற்று கண் ஆரோக்கியம், கண் தானம் மற்றும் உடற்கூறியல் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தனர். இந்த வினாடி வினா போட்டியை, X Quiz It நிறுவனத்தைச் சேர்ந்த அரவிந்த் ராஜீவ் மற்றும் மகேஷ் ராமகோபால் ஆகியோர் தொகுத்து வழங்கினர். அவர்களின் நுட்பமான கேள்விகள், புதுமையான அணுகுமுறை போட்டியாளர்களையும் பார்வையாளர்களையும் ஆர்வத்துடன் வைத்திருந்தன. கருவிழி மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் கண் தானம் பற்றிய கட்டுக்கதைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியின் செயலாளர் சுவாமி த்யானகம்யானந்தா, தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் டி. நகரின் தலைவர் டாக்டர் பிரவீன் தெல்லகுலா, சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். கடந்த ஆறு ஆண்டுகளாக வினாடி வினா போட்டியை தொடர்ந்து நடத்தி வரும் டாக்டர் மோகன் ராஜன் மற்றும் டாக்டர் சுஜாதா மோகன் ஆகியோரை பாராட்டினார். நான்கு சுற்றுகள் கொண்ட வினாடி வினா போட்டியில் சிவானந்தா ராஜாராம் சீனியர் செகண்டரி பள்ளியின் நிரவிக்னா பீதா முதல் பரிசை வென்றார். பி.எஸ்.பி.பி. மில்லினியம் பள்ளி, கெருகம்பாக்கம் மாணவரான அனிருத் பிரேம் இரண்டாம் இடத்தையும், கோளப்பாக்கம் வேலம்மாள் போதி பள்ளி மாணவரான ஸ்ரீநித்திஹாசன் மூன்றாம் இடத்தையும் பெற்றனர். இறுதி சுற்றில் பங்கேற்ற போட்டியாளர்கள் அனைவருக்கும் பங்கேற்பு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இது போன்ற நிகழ்வுகள் மூலம் மக்களிடையே கண் தானம் பற்றிய விழிப்புணர்வு உண்டாகும் என டாக்டர் சுஜாதா மோகன் பேசினார். கண் தானம் செய்ய விரும்புவோர் 98401 77177 என்ற ரோட்டரி ராஜன் கண் வங்கி தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.