திமுகவின் இந்தி திணிப்பு பிரசாரத்தை தூள் தூளாக்கிய பாஜவினர் | Amit Shah | Home Minister | Welcome by
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். கோவை ஏர்போர்ட் வந்த அவரை பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மத்திய அமைச்சர் எல்.முருகன், மூத்த நிர்வாகிகள் பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை, வானதி ஆகியோர் வரவேற்றனர். ஏர்போர்ட்டில் இருந்து நவ இந்தியா பகுதியில் அமித்ஷா தங்கும் ஹோட்டல் வரை சாலையின் இருபுறமும் பாஜ தொண்டர்கள் மேள, தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். புதனன்று கோவை மாவட்ட பாஜ அலுவலகத்தை திறந்து வைத்த பின், ஈஷாவில் நடக்கும் மஹாசிவராத்திரி நிகழ்ச்சியிலும் அமித்ஷா பங்கேற்க உள்ளார். தமிழகத்தில் இப்போது மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கை விவகாரம் பேசு பொருளாக உள்ளது. இந்தியை திணிக்க முயற்சிக்கும் மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம் என திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் மத்திய அரசை கடுமையாக விமர்சிக்கின்றன. அண்ணாமலை உள்ளிட்ட பாஜ தலைவர்கள் தினம் தினம் அதற்கு சூடான பதிலடியும் கொடுப்பதால் தமிழகத்தில் இந்த விவகாரம் அனல் பறக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் அமித்ஷா தமிழகம் வந்திருக்கிறார். இதை பயன்படுத்தி மத்திய பாஜ அரசு தமிழை எவ்வளவு நேசிக்கிறது என்பதை அமித்ஷா வரவேற்பில் வெளிப்படுத்தினர். குறிப்பாக அமித்ஷாவுக்கு போட்ட மாலை, சால்வை, பரிசாக வழங்கிய புத்தகங்கள் என அனைத்தும் கவனம் பெற்றன. மாலையில் தமிழ் வாழ்க என்ற சொல் தனி தனி அட்டைகளில் இணைத்திருந்தனர். சால்வையிலும் தமிழ் அன்னை வாழ்க என்ற வார்த்தை இடம் பெற்றிருந்தது. திருக்குறள் புத்தகம், திருப்புடை மருதூர் ஓவியங்கள் எனும் புத்தகமும் பரிசாக வழங்கப்பட்டது. ஒரு மத்திய அமைச்சருக்கு அனைத்து வரவேற்பும் தமிழ் மயமாக இருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.