ரஷ்யா கச்சா இறக்குமதி: இந்தியா அதிரடி ஆட்டம் US President Donald Trump russia india oil trade
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் துவங்கி, மூன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது. நாளுக்கு நாள் போர் தீவிரமாகி உயிரிழப்புகள் அதிகரிக்கத்தான் செய்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் முயற்சித்தும் போரை நிறுத்தும் எண்ணத்தில் ரஷ்யா இல்லை. இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதன் மூலம், உக்ரைனுக்கு எதிரான போருக்கு இந்தியா நிதியுதவி செய்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டினார். முதலில், அமெரிக்காவில் இறக்குமதியாகும் இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிததார். பிறகு, ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதற்காக, கூடுதலாக 25 சதவீதம் அபராத வரி விதித்தார். இந்திய பொருட்கள் மீது மொத்தம் 50 சதவீத வரி விதிக்கப்பட்டதால் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி பாதிக்கப்பட்டு இந்திய தொழில்துறையினர் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இது நியாயமற்ற நடவடிக்கை அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் என பிரதமர் மோடி கூறினார். நாட்டின் எரிபொருள் தேவையை கருத்தில் கொண்டும் மக்கள் நலனை மனதில் கொண்டும்தான் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாக என இந்திய வெளியுறவுத்துறை விளக்கமளித்தது. சீனா, ஐரோப்பிய யூனியன் நாடுகளும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா சுட்டிக்காட்டியது.